பதிவு செய்த நாள்
12
நவ
2023
05:11
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம், துடியலூர், தடாகம் வட்டாரங்களில் உள்ள சைவ, வைணவ திருக்கோவில்களில் தீபாவளி பண்டிகையையொட்டி சிறப்பு பூஜைகள், பஜனை நடந்தன.
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. வீடுகளில் மக்கள் அதிகாலையே எழுந்து, நீராடி, புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்து, இனிப்புகளை அண்டை வீட்டாருடன் பரிமாறி மகிழ்ச்சியாக கொண்டாடினர். விழாவையொட்டி, நரசிம்மநாயக்கன்பாளையம் லட்சுமி நரசிம்ம பெருமாள், பழையபுதூர் ஆதிமூர்த்தி பெருமாள், நாயக்கன் பாளையம், சின்னதடாகம் மற்றும் பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள கரி வரதராஜ பெருமாள் கோவில்கள், நாயக்கனூர் லட்சுமி நரசிங்க பெருமாள் கோவில், பாலமலை ரங்கநாதர் கோவில், இடிகரை பள்ளிகொண்ட ரங்கநாதர் கோவில்களில் பெருமாள் தாயார்களுடன் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வடமதுரை விருந்தீஸ்வரர் கோவில், இடிகரை வில்லீஸ்வரர் கோவில், பெரியநாயக்கன்பாளையம் ஈஸ்வரன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜைகள், அபிஷேக ஆராதனைகள் ஆகியன நடந்தன. விழாவில், திரளான பக்தர்கள் பங்கேற்று, இறைவனை வழிபட்டனர்.