பதிவு செய்த நாள்
14
நவ
2023
10:11
புதுடில்லி; அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க வரும்படி, 10 கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு அழைப்பு விடுக்க உள்ளதாக விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு தெரிவித்து உள்ளது.
உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் பிரமாண்டமாக கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலின் கட்டுமான பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. இந்த கோவிலின் கும்பாபிஷேகம் வரும் ஜனவரி 22ல் நடைபெறும் என கட்டுமான குழு அறிவித்துள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடக்கின்றன. இந்த விழாவில் பங்கேற்க, வி.எச்.பி., எனப்படும் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சார்பில் உள்நாடு மட்டுமின்றி, வெளிநாடு வாழ் இந்தியர்களும் பங்கேற்கும் வகையில், 10 கோடிக்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு அழைப்பு விடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பின் செயல் தலைவர் அலோக் குமார் கூறுகையில், உலகெங்கும் வசிக்கும் ஹிந்துக்கள், தங்கள் குடும்பத்துடன் இந்த விழாவில் பங்கேற்கும் வகையில் அடுத்தாண்டு ஜன., 1 முதல், 15ம் தேதி வரை, 10 கோடிக்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு அழைப்பு விடுக்க திட்டமிட்டுள்ளோம், என்றார்.