பதிவு செய்த நாள்
07
டிச
2023
02:12
உத்தரபிரதேசம், அயோத்தியில் ராமர் கோயில் பிரமாண்டமாக கட்டப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி 2020 ஆக., 5ல் அடிக்கல் நாட்டி துவக்கினார். 2.7 ஏக்கரில் 57,400 சதுர அடியில், மூன்று தளங்களாக அமைக்கப்படுகிறது. கோயிலை சுற்றி 70 ஏக்கரில் ஸ்ரீராமகுண்டம், அனுமன் சிலை, ராமாயண நுாலகம், மகரிஷி, வால்மிகி ஆராய்ச்சி நிலையம் மூலவர் மண்டபம் உட்பட 6 மண்டபங்கள் அமைய உள்ளன. மூலவர் கோபுரத்தின் உயரம் 161 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று தற்போது இறுதி கட்டத்தை அடைந்துள்ளது. ராமர் கோவில் கும்பாபிஷேகம் வரும் ஆண்டு ஜனவரி, 22-ம் தேதி நடக்கவுள்ளது. அதற்கான அழைப்பிதழ்களை ஜனவரி 1 முதல் 15ம் தேதி வரை நாடு முழுதும் வீடு வீடாகச் சென்று வழங்க விஸ்வ ஹிந்து பரிஷத் என்ற, வி.எச்.பி., அமைப்பு முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் ஒரு கோடி வீடுகளுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட உள்ளது.
விழாவில் பங்கேற்பதற்காக நாடு முழுவதும் முக்கிய பிரமுகர்களுக்கு ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த சேத்ரா அறக்கட்டளை சார்பில் அழைப்பிதழ் வழங்கப்பட்டு வருகிறது. தொழில் அதிபர்கள், நடிகர்கள், வீரர்கள், முக்கிய பிரமுகர்கள் உள்பட 7 ஆயிரம் பேருக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டு உள்ளது. 50 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள், நாடு முழுவதும் உள்ள முக்கிய குருமார்கள், மத தலைவர்கள், நாட்டின் பல்வேறு துறை நிபுணர்கள், ஓய்வுபெற்ற முக்கிய ராணுவ அதிகாரிகள், விஞ்ஞானிகள், பத்மஸ்ரீ, பத்ம பூஷன் விருது பெற்றவர்கள் என முக்கிய பிரமுகர்களுக்கும் கோவில் டிரஸ்ட் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.