பதிவு செய்த நாள்
15
நவ
2023
10:11
மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில், காப்பு கட்டுதலுடன் கந்த சஷ்டி விழா கோலாகலமாக துவங்கியது.
முருகனின் ஏழாம் படை வீடாக மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் கருதப்படுகிறது. இக்கோவிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இக்கோவிலில் ஆண்டுதோறும், வைகாசி விசாகம், தைப்பூசம் மற்றும் கந்த சஷ்டி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு கந்த சஷ்டி விழா, காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் நேற்று கோலாகலமாக துவங்கியது. நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, பால், நெய், தேன், இளநீர், சந்தனம் உள்ளிட்ட, 16 வகையான திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சுப்பிரமணிய சுவாமி ராஜா அலங்காரத்தில், பக்தர்களுக்கு காட்சியளித்தார். காலை, 9:00 மணிக்கு, விநாயகர் பூஜை செய்யப்பட்டு, மூலவர், விநாயகர், வீரபாகு, சூலத்தேவர், உற்சவ பெருமான், வள்ளி, தெய்வானைக்கு காப்பு கட்டப்பட்டது. தொடர்ந்து விரதம் இருக்கும் பக்தர்களுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. கந்த சஷ்டி விழாவின் துவக்க நாளான நேற்று, ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமியை தரிசனம் செய்தனர். மருதமலை மலைப்பாதை புனரமைப்பு நிறைவடைந்தததால், ஒரு மாதத்திற்கு பின், மருதமலை மலைப்பாதையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.