பதிவு செய்த நாள்
15
நவ
2023
10:11
சென்னை :கர்நாடக மாநிலம் சிருங்கேரியில், ஆதி சங்கரருக்கு பிரமாண்ட சிலை திறக்கப்பட்டது. நம் தேசத்தை முதன் முதலில் ஒருங்கிணைத்தவரும், சனாதன தர்மத்தை பரப்பியவருமான ஜகத்குரு ஆதி சங்கரருக்கு, கர்நாடக மாநிலம் சிருங்கேரியில் பிரமாண்ட சிலை நிறுவப்பட்டது.
கடந்த 10ம் தேதி, பாரதி தீர்த்த மகா சுவாமிகளின் சன்யாச சுவீகாரப் பொன் விழா தினத்தன்று, சிலை, தேசத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டது. சிருங்கேரி சாரதா பீடத்தின் ஜகத்குரு விதுசேகரபாரதி சுவாமிகள், அபிஷேகம் மற்றும்ஆராதனைகள் செய்தார்.ஒரே கல்லில் செதுக்கப்பட்ட இந்த, 32 அடி உயர ஆதி சங்கரர் சிலையின் எடை, 600 டன்; பீடத்தின் உயரம், 337 அடி. ஆதி சங்கரரின் நான்கு பிரதான சீடர்களான, சுரேஸ்வராச்சாரியார், பத்மபாதர், ஹஸ்தாமலகர், தோடகாச்சாரியார் ஆகியோரின் சிலைகளும், அவர்களின் வயதிற்கேற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு சிலைக்குப் பின்னும், அது சார்ந்த வாசகம் உள்ளிட்ட தகவல்களும் உள்ளன. இந்த வளாகத்தில், வழிபாட்டிற்கான சிலைகள் தவிர, பன்னாட்டு தரம் வாய்ந்த அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை, சிருங்கேரி மடத்தின் தலைமை நிர்வாகி கவுரிசங்கர் செய்திருந்தார். அபிநவ வித்யா தீர்த்த மகா சுவாமிகளின் ஜெயந்தி தினமான நவ., 12ம் தேதி, சங்கர விஜயம் எனும் திருவிழா, தீபாவளி அன்று நடத்தப்பட்டது. இதை விதுசேகர பாரதி சுவாமிகள் துவக்கி வைத்து அருளாசி வழங்கினார். இதன் ஓர் அங்கமாக சென்னை வித்யா தீர்த்த பவுண்டேஷன் சார்பில், சிறப்பு புகைப்பட கண்காட்சி ஒன்றும் நடத்தப்பட்டது.அதைத் தொடர்ந்து, மதுரை சின்மயா மிஷன் சுவாமி சிவயோகானந்தா, ஸ்ரீஆதிசங்கரரும் நிலையான ஆனந்தமும் என்ற தலைப்பில் உரை ஆற்றினார்.