பதிவு செய்த நாள்
16
நவ
2023
11:11
சத்தியமங்கலம்; தாளவாடி அருகே, ஒருவருக்கொருவர் சாணியடித்து வினோத விழாவை கொண்டாடினர். ஈரோடு மாவட்டம், தாளவாடி அருகே உள்ள கும்டாபுரத்தில், 300 ஆண்டுகள் பழமையான பீரேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு தீபாவளி பண்டிகை முடிந்து, மூன்றாவது நாள் வினோதமான சாணியடி திருவிழா நடைபெறும். விழாவின் முதல் நாளே கோவில் அருகே உள்ள ஒரு இடத்தில், பசு சாணத்தை கொண்டு வந்து குவித்து விடுவர். பின் பீரேஸ்வரருக்கு சிறப்பு பூஜை நடத்தப்படும். இதையடுத்து, ஒருவர் மீது ஒருவர் சாணத்தை வீசி கொண்டாடுவர்.
வழக்கம்போல் இந்தாண்டு விழா நேற்று நடந்தது. முன்னதாக மாடு வளர்ப்பவர்கள் அவரவர் வீடுகளில் இருந்து பசு சாணத்தை கொண்டு வந்து, கோவில் அருகே குவித்து வைத்தனர். நேற்று காலை ஊர் குளத்தில் இருந்து, கழுதை மேல் உற்சவர் சிலையை வைத்து ஊர்வலமாக கோவிலுக்கு அழைத்து வந்தனர். பின் மூலவர், உற்சவருக்கு சிறப்பு பூஜை நடந்தது. அதன் பின், ஆண்கள், சிறுவர்கள் மேலாடை அணியாமல் சாணம் கொட்டப்பட்டிருந்த இடத்துக்கு சென்றனர். பிறகு ஒருவர் மீது ஒருவர் சாணத்தை உருட்டி வீசி மகிழ்ந்தனர். பெண்கள் சாணியடி திருவிழாவில் கலந்துகொள்ள மாட்டார்கள். அதனால் துாரத்தில் நின்று கை தட்டி ரசித்து பார்த்தனர். 1 மணி நேரம் சாணியடி திருவிழா நடந்தது. அதன் பின், அனைவரும் ஊர்க்குளத்துக்கு சென்று நீராடி வீட்டுக்கு சென்றனர். இதையடுத்து, உடைகளை மாற்றிக்கொண்டு மீண்டும் கோவில் வந்து சாணியடி திருவிழா நடந்த இடத்தில் கிடந்த சாணியை எடுத்து சென்று, தங்களுடைய நிலங்களில் வீசினர். இவ்வாறு செய்தால், பயிர்கள் நோய் தாக்காமல் செழிப்பாக வளரும் என்பது அங்குள்ளவர்களின் நம்பிக்கையாக உள்ளது.