பதிவு செய்த நாள்
16
நவ
2023
12:11
தஞ்சாவூர், ஐப்பசி மாத கடைமுழுக்கு தீர்த்தவாரியை முன்னிட்டு, திருவையாறு காவிரி ஆற்றில் புஷ்யமண்டப படித்துறையில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர்.
ஐப்பசி மாதம் துலாம் மாதம் என அழைக்கப்படுகிறது. ஐப்பசி மாதத்தில் காவிரி ஆற்றில் நீராடினால் புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று புண்ணிய நதிகளும், முக்கோடி தேவர்களும் காவிரியில் மூழ்கி தங்கள் பாவத்தை போக்கி கொண்டதாக புராணங்களில் கூறப்பட்டுள்ளன. துலாம் மாதம் முழுவதும் காவிரியில் நீராடினால், ஏழு ஜென்மங்களில் செய்த பாவம், முன்னோர்களின் சாபம் நீங்குவதாக நம்பிக்கை. இந்நிலையில் துலாம் (ஐப்பசி) மாதத்தின் கடைசி நாளான இன்று(16ம் தேதி) தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் உள்ள காவிரி ஆற்றில் கடைமுழுக்கு தீர்த்தவாரி நடந்தது. இதையொட்டி ஐயாறப்பர், தர்மசம்வர்த்தினி அம்மனுடன் சிறப்பு அலங்காரத்தில் புஷ்ய மண்டப படித்துறைக்கு எழுந்தருளினார். பின்னர், அஸ்தர தேவருக்கு காவிரி ஆற்றங்கரையில் பால், மஞ்சள் உள்ளிட்ட மங்கல பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாரதனை காண்பிக்கப்பட்டன. இதையொட்டி ஏராளமானோர் தர்ப்பணம் கொடுத்தும், காவிரி ஆற்றில் புனித நீராடியும் வழிபட்டனர்.
களைகட்டிய கரும்பு விற்பனை: ஐப்பசி மாதத்தில் கடைமுழுக்கை முன்னிட்டு, காவிரி ஆற்றில் குளித்து விட்டு தங்களின் பாவங்களை போக்கிய நிலையில், இனிப்புடன் வாழ்க்கையை துவக்க வேண்டும் என்பதற்காக கரும்பு வாங்கி செல்வது ஐதீகம் என கூறப்படுகிறது. மேலும், அதிகளவில் கரும்பு விற்பனையானதால் இந்தாண்டு கரும்பு நல்ல மகசூலோடு, விலை இருக்கும் என்பது வியபாரிகளின் நம்பிக்கையாக உள்ளது.