பதிவு செய்த நாள்
18
நவ
2023
05:11
தூத்துக்குடி: அநீதியை அழித்து நீதியை நிலை நாட்டும் விதமாக சூரனை வதம் செய்யும் "சூரசம்ஹாரம் நிகழ்ச்சி, திருச்செந்தூரில் நடந்தது. ஏராளமான பக்தர்கள், பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.
திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழா, நவ.,13 ல், யாகசாலை பூஜையுடன் துவங்கியது. பக்தர்கள், பச்சை ஆடை அணிந்து விரதம் துவக்கினர். முருகன் தினமும், யாக சாலையில் எழுந்தருளினார். உச்சி காலத்தில், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாரதனை நடந்தது. சஷ்டி விழாவின் நிறைவாக, சூரசம்ஹார நிகழ்ச்சி இன்று 18 ம்தேதி காலை 7 மணிக்கு, யாகசாலை பூஜையுடன் துவங்கின. யாகசாலை மண்டபத்தில், ஜெயந்திநாதர் எழுந்தருளினார்; தீபாரதனை நடந்தது. உச்சிகால பூஜைக்குப் பின், சண்முக விலாச மண்டபத்தில், ஜெயந்திநாதர் எழுந்தருளினார். சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. பின், திருவாவடுதுறை கந்தசஷ்டி மண்டபத்தில் எழுந்தருளினார். மாலை சூரசம்ஹாரத்திற்காக கடற்கரையில், ஜெயந்திநாதர் எழுந்தருளினார். முதலில், கஜமுகத்துடன் சூரபத்மன் தோன்றினான். அவன் ஆணவத்துடன் தலையை ஆட்டியபடி, ஜெயந்திநாதரை சுற்றி வந்தவுடன், அவனை வதம் செய்து தலையை கொய்தார். மீண்டும், சிங்கமுகத்துடன் வந்த சூரனை, மணிக்கு, ஜெயந்திநாதர் வதம் செய்தார். பின், சூரபத்மன் நேரிடையாக தோன்றினான். அவனையும் வதம் செய்தார். சூரனை அழித்து தனது வாகனங்களான சேவலாகவும், மயிலாகவும் ஏற்றுக்கொண்டார். கடற்கரையில், இந்நிகழ்ச்சியை கண்ட பக்தர்கள், "கந்தனுக்கு அரோகரா, "கந்தவேல் முருகனுக்கு அரோகரா கோஷங்களுடன் பரவசம் அடைந்தனர். கடல் அலைகளை மிஞ்சும் விதமாக, கடற்கரை முழுதும் பக்தர்கள் திரண்டனர். பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்த ஜெயந்திநாதர், சந்தோஷ மண்டபத்தில், வள்ளி தெய்வானையுடன் அருள்பாலித்தார். பின், பூஞ்சப்பரத்தில் எழுந்தருளிய ஜெயந்திநாதருக்கு, 108 மகா சக்தி மண்டபத்தில், சாய அபிஷேக ஆராதனை நடந்தது. சூரசம்ஹாரத்திற்கு பின், பக்தர்கள் கடலில் நீராடி விரதம் முடித்தனர்.