பதிவு செய்த நாள்
25
நவ
2023
12:11
பழநி: பழநி கோயிலில் நாளை (நவ.26) திருக்கார்த்திகை விழா நடைபெறும். மலைகோயில் செல்ல ஒரு வழிப்பாதையில் பக்தர்கள் அனுமதிக்க படுவர். தங்க ரதம் புறப்பாடு நடைபெறாது என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பழநி கோயிலில் திருக்கார்த்திகை விழா நவ.20 முதல் நடைபெற்று வருகிறது. இன்று (நவ.25., ல்) மாலை சன்னதியில் மாலை 5:30 மணிக்கு சாயரட்சை பூஜைக்கு பின் பரணி தீபம் ஏற்றுதல் நடைபெறும். திருக்கார்த்திகை தினமான நாளை (நவ.,26.,) விழாவை முன்னிட்டு அதிகாலை 4:00 மணிக்கு விஸ்வரூப தரிசனம், மாலை 4:00 மணிக்கு சாயரட்சை பூஜையும், சின்ன குமாரசுவாமி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி யாகசாலை, பிரகாரம் வலம் வருவார். அதன்பின் தீபமேற்றும் மண்டபத்திற்கு எழுந்தருள்வார். பிரகாரங்களில் தீபம் வைத்தல் நடைபெறும். மாலை 6:15மணிக்கு தீப ஸ்தம்பத்தில் மகாதீபம் ஏற்றும் நிகழ்வு நடைபெறும். அக்னி லிங்க தரிசனமும், சொக்கப்பனையும் ஏற்றுதலும் நடைபெறும். இதை தொடர்ந்து திருஆவினன்குடி கோயில், பெரியநாயகியம்மன் மகா தீபம் சொக்கப்பனை ஏற்றும் நிகழ்வுகள் நடைபெறும்.
ஒருவழிப்பாதை: திருக்கார்த்திகை தினத்தில் பக்தர்கள் வருகை அதிகம் இருக்கும் என கருதி பாதுகாப்பு காரணமாக, மலைக் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல குடமுழுக்கு நினைவரங்கம், வழியாக மேலே செல்லவும், படிப்பாதை வழியாக கீழே இறங்கி சென்று மலைக்கோயில் செல்லும் பாதை ஒரு வழி பாதையாக பக்தர்கள் பயன்படுத்த வேண்டும். மேலும் பக்தர்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்த பிற்பகல் 2:00 மணிக்கு மேல் பக்தர்கள் மலைக்கோயில் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள். அதன் பின் மாலை 6:00 மணிக்கு மேல் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்.
தங்கரத புறப்பாடு நிறுத்தம்: கார்த்திகை தீபம் ஏற்றும் நிகழ்வை முன்னிட்டு தீபத்திருநாளான நவ.26 அன்று மட்டும் தங்க ரதத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறாது. என கோயில் இணை கமிஷனர் மாரிமுத்து தெரிவித்துள்ளார்.