பதிவு செய்த நாள்
25
நவ
2023
12:11
ஸ்ரீவில்லிபுத்தூர்: அயோத்தி ஸ்ரீராமஜன்ம பூமியில் ஸ்ரீ ராமர் திருவடியில் பூச்சிக்கப்பட்ட அட்சதை விருதுநகர் மாவட்ட மக்களுக்கு வழங்குவதற்காக கொண்டுவரப்பட்டு, அதற்கான வரவேற்பு விழா ஸ்ரீவில்லிபுத்தூரில் நடந்தது.
2024 ஜனவரி 22ல் நடக்கவுள்ள ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் சாதுக்கள், சன்னியாசிகள், பிரதமர் நரேந்திர மோடி, உலக நாடுகளைச் சேர்ந்த 8 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர். இதில் பங்கேற்க ஸ்ரீவில்லிபுத்தூர் மணவாள மாமுனிகள் சன்னதியின், சடகோப இராமானுஜ ஜீயர் சுவாமிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அயோத்தி ஸ்ரீராம் ஜென்ம பூமி தீர்த்த சேஷாத்ர டிரஸ்ட் சார்பாக ராமஜென்ம பூமியில் பூஜிக்கப்பட்ட கும்பாபிஷேக அழைப்பிதழ், ஆலய படம், அட்சதை விருதுநகர் மாவட்டத்தில் வீடுகள் தோறும் மக்களுக்கு வழங்கப்படவுள்ளது. இதற்காக அயோத்தியில் இருந்து கொண்டுவரப்பட்ட அட்சதையானது ஸ்ரீவில்லிபுத்தூர் மணவாள மாமுனிகள் சன்னதிக்கு காலை வந்தது. அங்கு சடகோப ராமானுஜர் ஜீயர் சுவாமிகள் வரவேற்று மங்களாசாசனம் செய்தார். பின்னர் ஆண்டாள் சன்னதிக்கு கொண்டு செல்லப்பட்டு ஆண்டாள், ரெங்க மன்னார் திருவடியில் சமர்ப்பிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. இந்நிகழ்ச்சியில் விஷ்வ ஹிந்து பரிஷத் தென் மாநில அமைப்பாளர் சரவண கார்த்திக், மாவட்ட செயலாளர் ஆனந்த், பா. ஜனதா மாவட்ட தலைவர் சரவணதுரைராஜா, மாவட்ட பொறுப்பாளர் ராமச்சந்திர ராஜா, வி.ஹெச்.பி. மாவட்ட பொறுப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, ஆடிட்டர் சக்திவேல் , நிர்வாகிகள் பங்கேற்றனர்.