பதிவு செய்த நாள்
27
நவ
2023
10:11
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவிலுக்குள் மஹா தீபம் காண, 14 ஆயிரம் பேரை அனுமதித்ததால், கூட்ட நெரிசலில் பக்தர்கள் சிக்கி தவித்தனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று நடந்த மஹா தீப விழாவில், பஞ்ச மூர்த்திகள் தரிசனம், அர்த்தநாரீஸ்வரர் தரிசனம் மற்றும் மஹா தீப தரிசனத்தை ஒன்று சேர தரிசிக்க முடியும். வழக்கமாக பொதுப்பணித்துறையினர், 7,000 பக்தர்களை மட்டும் கோவிலுக்குள் செல்ல அனுமதி வழங்குவர். இதில்லாமல் கோவில் ஊழியர், பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் என, 8,500 பேர் கோவில் வளாகத்தில் இருப்பர். ஆனால், இந்தாண்டு, தி.மு.க., அரசு அறங்காவலர் குழு நியமிக்கப்பட்டு, அவர்களது கண்காணிப்பில் திருவிழா நடந்தது. வி.ஐ.பி.,க்கள் பாஸ் முற்றிலும் தடை செய்யப்படுவதாக, அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்திருந்தார். ஆனாலும், அரசியல் கட்சியினருக்கு முக்கிய பிரமுகர்களுக்கான பேட்ஜ் வழங்கப்பட்டிருந்தது. மேலும், உபயதாரர், கட்டளைதாரர்கள் என, அச்சிடப்பட்ட அட்டை கட்சிகாரர்களுக்கு தாராளமாக வழங்கி, அவர்கள் மூலமாக வேண்டியவர்களுக்கு வழங்கியுள்ளனர். இதனால், 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். கூட்ட நெரிசல் ஏற்பட்டு அவதிக்கு ஆளாகினர்.