3000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சங்காரண்யேஸ்வரர் கோயிலில் லட்சதீபம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03டிச 2023 10:12
மயிலாடுதுறை; கோச்சங்க சோழனால் கட்டப் பட்டதும், சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதுமான 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததுமான தலைச்சங்காடு சங்காரண்யேஸ்வரர் கோயிலில் கார்த்திகை ஞாயிறை முன்னிட்டு லட்சதீபம். பொதுமக்கள் ஏற்றிய அகல்விளக்கு தீபங்களால் ஒளி ஓவியமாக ஜொலித்த கோயில்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா தலச்சங்காட்டில் 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சங்காரண்யேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. கோட்செங்க சோழனால் கட்டப்பட்ட மாட கோயில்களில் ஒன்றானதும், தேவாரம் பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் 45 ஆவது ஆலயமான இந்த கோயில் பற்றி சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ள பெருமை மிகுந்ததாகும். புராண காலத்தில் மகாவிஷ்ணு கையில் ஏந்தி உள்ள பாஞ்சசன்ய சங்கை இங்கு இறைவனை வேண்டி பெற்றதாக தல புராணம் கூறுகிறது. இந்த ஆலயத்தின் வடிவமைப்பு சங்கை போன்று அமைந்துள்ளது. சோழர் காலத்தைச் சார்ந்த பழமையான 10 கல்வெட்டுகள் இந்த ஆலயத்தில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட இக்கோயிலில் இன்று கார்த்திகை 3வது ஞாயிறை முன்னிட்டு கிராம மக்கள் சார்பில் லட்சதீபம் ஏற்றும் நிகழ்ச்சி ஆலயத்தில் நடைபெற்றது. கணபதி பூஜையுடன் துவங்கியது. 18 சித்தர்கள் உடனாகிய காளஹஸ்தீஸ்வரர், கேரள விளக்கு, சிவன் அம்பாள் முருகன் விஷ்ணு தேர், ஓம் நமச்சிவாய, உயிர்மெய் எழுத்துகள் ரங்கோலி உள்ளிட்ட கோலங்கள் இட்டு அகல் விளக்குகளை பொதுமக்கள் ஏற்றி உலக நன்மை வேண்டியும் கிராமம் செழிக்கவும் சுவாமி அம்பாளை வேண்டி தரிசனம் செய்தனர். இதன் காரணமாக பழமையான இந்த ஆலயம் தீப ஒளி வெள்ளத்தில் ஒளி ஓவியமாக காட்சி அளித்தது. கைலாய வாத்தியங்கள் முழங்க சுவாமி மற்றும் அம்பாளுக்கு தீபாராதனை நடைபெற்றது. முன்னதாக சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. கிராம ஒற்றுமை சங்க துணை தலைவர் ராஜா அறங்காவலர் குழு தலைவர் பத்மநாபன் மற்றும் அறங்காவலர்கள் சுகன்யா, மகேந்திரன் ஆனந்த், உள்ளிட்ட திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர். கோயில் நிர்வாகம் சார்பில் அன்னதானமும் வழங்கப்பட்டது.