திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோவில் நகைகள் மாயமாகவில்லை: அரசு தகவல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07டிச 2023 02:12
மதுரை:கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோவிலில் நகைகள் குறித்து தாக்கலான வழக்கில், நகைகள் மற்றும் சிலைகள் ஹிந்து சமய அறநிலையத் துறையின் பாதுகாப்பு அறையில் பராமரிக்கப்படுகின்றன என, தமிழக அரசு தரப்பு தெரிவித்ததால் வழக்கை உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது. திருவட்டாறு ராமச்சந்திரன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோவிலில் அரசின் அனுமதியின்றி, நகைகள் மற்றும் பாதுகாப்பு அறை அகற்றப்பட்டன. அறையிலிருந்த பொருட்கள் திருடு போயின. திருடுபோன நகைகளை மீட்க நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டிருந்தது. மனுவை நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார். தமிழக அரசு தரப்பில், நகைகள், சிலைகள் மாயமாகவில்லை. ஹிந்து சமய அறநிலையத்துறையின் பாதுகாப்பு அறையில் பராமரிக்கப்படுகின்றன. கும்பாபிஷேகத்தின் போது மத்திய தொல்லியல் துறையின் அனுமதியுடன் கோவில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டது. புது கட்டுமானங்கள் அகற்றப்பட்டன என தெரிவிக்கப்பட்டது.
நீதிபதி பிறப்பித்த உத்தரவு: மனுதாரர் எவ்வித ஆதாரமும் இல்லாமல் மனு தாக்கல் செய்துள்ளார்; மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. 1992ல், தங்க அங்கி உட்பட சில நகைகள் திருடு போயின. இவற்றில் சில நகைகளை போலீசார் மீட்டு உள்ளனர். குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. கிரிமினல் வழக்கு, சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதை விரைவுபடுத்தி வழக்கை முடித்து மற்ற நகைகளை மீட்க கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.