அன்னூர்: அன்னூரில் இன்று (டிச.,8) அதிகாலை 2 மணிக்கு துவங்கி காலை 8 மணி வரை 6 மணி நேரம் தொடர்ந்து மழை பெய்தது. இதில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான மன்னீஸ்வரர் கோயில் வளாகத்திற்குள் மழை நீர் புகுந்தது. 120 ஏக்கர் பரப்பளவு உள்ள கஞ்சப்பள்ளி குளம் நிரம்பி உடையும் நிலையில் உள்ளது. தாசில்தார் காந்திமதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குளத்தை ஆய்வு செய்தனர். அன்னூர் அவினாசி சாலையில் ஒரு வழிப்பாதையாக தீயணைப்புத் துறையினரும் போலீசாரும் வாகனங்களை ஒழுங்குபடுத்தி அனுப்பி வைக்கின்றனர். குன்னத்தூராம்பாளையம், ஆயிமா புதூர் பகுதியில் 100 வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. தீயணைப்புத் துறையினரும் வருவாய்த் துறையினரும் பேரூராட்சி ஊழியர்களும் சீரமைப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.