பதிவு செய்த நாள்
11
டிச
2023
02:12
கருமத்தம்பட்டி; சென்னியாண்டவர் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு உடை கட்டுப்பாடு முறையை கோவில் நிர்வாகம் அமல்படுத்தி உள்ளது.
கருமத்தம்பட்டி அடுத்து விராலிக்காட்டில் சென்னியாண்டவர் கோவில் உள்ளது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள், உடை கட்டுப்பாட்டு முறையை கடைபிடிக்குமாறு கோவில் நிர்வாகம் பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. கோவில் முன் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகையில்," கோவிலுக்கு வரும் ஆண்கள், வேஷ்டி, சட்டை மற்றும் பேண்ட் அணிந்து வரவேண்டும். புடவை, தாவணி, துப்பட்டாவுடன் கூடிய சுடிதார் ஆகிய உடைகளை பெண்கள் அணிந்து வரவேண்டும், என, கூறப்பட்டுள்ளது. லுங்கி, பெர்முடாஸ், லெக்கின்ஸ், உள்ளிட்ட ஆடைகளை அணிந்து வருவதை தவிர்க்கவும் பக்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பக்தர்கள் நமது கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை காக்கும் வகையில், பராம்பரிய உடைகளை அணிந்து வந்து சாமி தரிசனம் செய்ய, கோவில் நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில், சாமி தரிசனம் செய்ய கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு உடை கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டுள்ளது வரவேற்க்கத்தக்கது. இதேபோன்று அனைத்து கோவில்களிலும் நடைமுறைப்படுத்த வேண்டும், என்றனர்.