ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை விழா கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18டிச 2023 05:12
ரெகுநாதபுரம்; ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை விழாவினை முன்னிட்டு தங்க முலாம் பூசப்பட்ட கொடிமரத்தில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக இன்று அதிகாலை 4:15 மணியளவில் கணபதி ஹோமம், அஷ்டபிஷேகம், சிறப்பு அலங்கார தீபாராதனைகள் உள்ளிட்டவைகள் நடந்தது.
ரெகுநாதபுரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் சரண கோஷம் முழங்க, கொடிமரத்தில் கொடி பட்டம் ஏற்றும் நிகழ்ச்சியில் வல்லபை தலைமை குருசாமி மோகன் கொடி ஏற்றி துவக்கி வைத்தார். ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் சுவாமி தரிசனம் செய்தனர். 18 படிகளிலும் நெய் தீபம் ஏற்றப்பட்டது. மலர்களால் அர்ச்சனை செய்யப்பட்டது. காலை 8:00 மணி மற்றும் மாலை 7:30 மணியளவில் பூத பலி நிகழ்ச்சி நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. வருகிற டிச.26 செவ்வாய்க்கிழமை அன்று அஷ்டாபிசேகமும் மாலை 4:00 மணியளவில் பள்ளி வேட்டை புறப்பாடு நகர்வலமும் மற்றும் இரவு 10:00 மணி அளவில் சயன பூஜைகளும், மறுநாள் டிச.,27 புதன்கிழமை அன்று காலை அதிகாலை 4:00 மணியளவில் கோபூஜை, பள்ளி உணர்தல் பூஜை மற்றும் கணபதி ஹோமத்துடன் விழா துவங்குகிறது. காலை 8:00 மணியளவில் ஐயப்ப பக்தர்கள் உடலில் வண்ணப் பொடிகளை பூசியவாறு பேட்டை துள்ளல் நிகழ்ச்சியும் 9:00 மணியளவில் கோயில் பின்புறமுள்ள பஸ்மக்குளத்தில் உற்ஸவர் ஐயப்பனுக்கு ஆராட்டு விழாவும் நடக்கிறது. பின்னர் காலை 10 மணி அளவில் கொடியிறக்கமும் மகா அபிஷேகமும், அன்னதானமும் நடக்கிறது. ஏற்பாடுகளை வல்லபை ஐயப்பன் கோயில் சேவை நிலைய அறக்கட்டளையினர் செய்து வருகின்றனர்.