பதிவு செய்த நாள்
19
டிச
2023
05:12
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று அதிகாலை முதல் வழக்கத்தை விட அதிகளவில் ஐயப்பன், முருக பக்தர்கள் கோயிலுக்கு வருகை புரிந்தனர்.
கோயிலுக்கு வழக்கமாக வரும் உள்ளூர் பக்தர்களுடன் கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் ஐயப்பன் கோயிலுக்கும், பழனி முருகன் கோயிலுக்கும் மாலை அணிந்து விரதம் மேற்கொள்ளும் வெளியூர் பக்தர்கள் ஏராளமானோர் வருவர். திருப்பரங்குன்றத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட திருமண மண்டபங்கள் இருப்பதால், ஏராளமான பக்தர்கள் முதல் நாள் இரவு திருப்பரங்குன்றம் வந்து தங்கி மறுநாள் அதிகாலையில் சுப்பிரமணிய சுவாமியை தரிசித்து விட்டு மற்ற ஊர்களுக்கு செல்வர். இந்த மூன்று மாதங்களிலும் அதிகாலை 4:30 மணியிலிருந்து காலை 10:00 மணி வரையிலும் ஐயப்பன், முருக பக்தர்களின் எண்ணிக்கை அதிகளவில் வருவர். இன்று செவ்வாய்க்கிழமை என்பதால் வழக்கத்தைக் காட்டிலும் ஆயிரக்கணக்கான உள்ளூர், வெளியூர் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்காக திருப்பரங்குன்றம் வந்தனர். சாதாரண நாட்களில் மூலஸ்தானத்தில் கட்டண தரிசன பக்தர்கள் ஒரு வரிசையிலும், இலவச தரிசனம் பக்தர்கள் ஒரு வரிசையிலும் அனுப்பப்படுவர். கூட்டம் அதிகமாக இருக்கும் பொழுது இலவச தரிசன பக்தர்கள் மூலஸ்தானத்தில் மூன்று வரிசைகளில் அனுப்பப்படுவர். இன்று அதிகளவில் பக்தர்கள் வந்த போதும், கோயிலுக்கு வருமானத்தை அதிகரிக்கும் வகையில் மூலஸ்தானத்தில் இரண்டு வரிசைகளில் மட்டுமே அனுப்பப்பட்டனர். இதனால் இலவச தரிசன பக்தர்கள் இரண்டு மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து சென்றனர். ஏராளமான பக்தர்கள் சிறப்பு தரிசன டிக்கெட் எடுத்து சுவாமி தரிசனம் செய்தனர். திருப்பரங்குன்றத்தில் வாகனங்கள் நிறுத்த பார்க்கிங் வசதி இல்லாததால் ரத வீதிகள், பெரிய ரத வீதி, ஜி.எஸ்.டி. ரோடு பகுதிகளில் வாகனங்கள் நிறுத்தப்பட்டது. வாகனங்கள் சீராக நிறுத்தப்படாததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பக்தர்கள் கோயிலுக்குள் விரைவாக தரிசனம் செய்ய கோயில் நிர்வாகமும், வாகனங்களை சீர்படுத்த போலீசாரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.