திருப்பதி; திருப்பதியில் இன்று கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்றது. டிசம்பர் 23ம் தேதி வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருமலை ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி வாரி கோயிலில் கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் இன்று 19ம் தேதி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஆண்டுக்கு நான்கு முறை கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நடத்துவது வழக்கம். உகாதி, ஆனிவார ஆஸ்தானம், பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி ஆகிய விழாக்களுக்கு முந்தைய செவ்வாய்கிழமையன்று கோயில் சுத்திகரிப்பு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இன்று 19ம் தேதி காலை 6 மணி முதல் 10 மணி வரை கோவில் சுத்தம் செய்யும் நிகழ்ச்சி அர்ச்சகர்களால் நடைபெற்றது. கோயிலில் உள்ள ஆனந்தநிலையம் தொடங்கி பங்காருவாகிலி வரை ஸ்ரீவாரி கோயிலுக்குள் உள்ள அனைத்து உபகோயில்கள், கோயில் வளாகங்கள், சுவர்கள், மேற்கூரை, பூஜை சாமான்கள் என அனைத்தும் தண்ணீரால் சுத்தம் செய்யப்பட்டது. காலை 10.30 மணி முதல் பக்தர்கள் சர்வ தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.