பதிவு செய்த நாள்
26
டிச
2023
11:12
புதுடில்லி: ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை பா.ஜ., அரசியல் ஆக்குவதால், விழாவில் பங்கேற்க போவதில்லை என மார்க்.,கம்யூ., கட்சியின் பிருந்தா காரத் கூறியுள்ளார். முன்னாள் மத்திய அமைச்சர் கபில் சிபலும் பங்கேற்க போவதில்லை என்றார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள பா.ஜ., அழைப்பிதழ் அனைவருக்கும் அனுப்பப்பட்டு உள்ளது. ஆனால், கடவுள் ராமர் அழைத்தவர்கள் மட்டுமே கும்பாபிஷேகத்தில் பங்கேற்க அயோத்தி வருவார்கள் எனக்கூறியுள்ளது.
ராமர் கோயில் கும்பாபிஷேகம் ஜன.,22ல் கோலாகலமாக நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில், முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டு வருகின்றன. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி , அமித்ஷா, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் உள்ளிட்ட பலர் பங்கேற்க உள்ளனர். கும்பாபிஷேக விழாவில் பங்கேற்கும்படி காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களுக்கும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டு உள்ளது.
இந்நிலையில், மார்க்சிஸ் கட்சியின் மூத்த தலைவர் பிருந்தா காரத் கூறுகையில், மத ரீதியிலான நிகழ்ச்சி அரசியலாக்கப்படுவதால், விழாவை புறக்கணிக்க கட்சி முடிவு செய்துள்ளது. விழாவிற்கு நாங்கள் போக மாட்டோம். மத நம்பிக்கைகளை நாங்கள் மதிக்கிறோம். ஆனால், அவர்கள் மத நிகழ்ச்சியை, அரசியலுடன் தொடர்பு படுத்துகிறார்கள். இது சரியான திட்டம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
முன்னாள் மத்திய அமைச்சர் கபில் சிபல் கூறுகையில், பா.ஜ.,வினர் கடவுள் ராமரை பற்றி பேசுகின்றனர். ஆனால், ராமர் கற்றுக் கொடுத்த சகிப்புத்தன்மை, தியாகம், மரியாதை, உண்மையாக இருத்தல் ஆகியவற்றிற்கு எதிராக செயல்படுகின்றனர். உங்கள் மனதில் ராமரின் கொள்கைகள் இருப்பது முக்கியம். எனது மனதில் ராமர் உள்ளார். இதனால், நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்றார். இந்த விழாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் பங்கேற்காது என தகவல் வெளியாகி உள்ளது.
எதிர்க்கட்சிகளின் முடிவு தொடர்பாக பா.ஜ.,வின் மீனாட்சி லேகி கூறுகையில், கும்பாபிஷேகத்தில் பங்கேற்கும்படி அனைவருக்கும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டு உள்ளது. ஆனால், கடவுள் ராமர் அழைத்தவர்களால் மட்டுமே அயோத்திக்கு வர முடியும் என்றார்.
மஹாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கூறுகையில், பா.ஜ.,வை கிண்டல் செய்தவர்கள் தைரியம் இருந்தால் அயோத்தி வரட்டும். அவர்களுக்கு ராமர் கோயிலை காண்பிக்க தயாராக உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.