உத்தரகோசமங்கையில் புதிய சந்தனக்காப்பில் பச்சை மரகத நடராஜர்; தாழம்பூ சாற்றப்பட்டு கதவு அடைப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28டிச 2023 08:12
உத்தரகோசமங்கை; ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை மங்களநாதர் சமேத மங்களேஸ்வரி அம்மன் கோயிலில் பச்சை மரகத நடராஜருக்கு சந்தன காப்பு நேற்று முன்தினம் காலை 8:00 மணிக்கு களையப்பட்டு 32 வகையான அபிஷேக ஆராதனைகள் நடந்தது.
மாணிக்கவாசகரால் பாடல் பெற்ற பழமையும் புரதான சிறப்பையும் பெற்ற மங்களநாதர் சுவாமி கோயிலில் கடந்த டிச.,18ல் காப்பு கட்டுதலுடன் ஆருத்ரா தரிசன விழா துவங்கியது. நேற்று முன்தினம் காலை 9:00 மணி முதல் நள்ளிரவு வரை லட்சக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். நேற்று அதிகாலை 1:00 முதல் 3:30 மணி வரை சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நிறைவேற்றப்பட்டு, 51 கிலோ எடை கொண்ட புதிய சந்தனம் மரகத நடராஜரின் திருமேனியில் காப்பிடப்பட்டு சர்வ மலர் அலங்காரத்தில் தாழம்பூ சாற்றப்பட்டது. நேற்று காலை 4:15 மணிக்கு அருணோதய நேரத்தில் ஆருத்ரா தரிசனத்தை காண்பதற்காக ஏராளமான பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்தனர். காலை 10 மணி அளவில் கூத்தர் பெருமான் திருவீதி உலா நடந்தது. மாலை 6:00 மணிக்கு பஞ்சமூர்த்திகளுக்கு அபிஷேகமும், வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி புறப்பாடும் நடந்தது. இரவு 8:30 மணிக்கு மாணிக்கவாசகர் சுவாமிக்கு காட்சி கொடுத்து சிறப்பு பஞ்சமூர்த்தி புறப்பாடு, வெள்ளி ரிஷப சேவையில் அருள் பாலித்தார். முன்னதாக பச்சை மரகத நடராஜர் சன்னதியில் நேற்று மதியம் 1:00 மணிக்கு கிரில் கதவு அடைக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது. வருடம் ஒருமுறை மட்டுமே ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு சந்தன காப்பு களையப்படும். மீதமுள்ள நாட்களில் கதவின் இடைவெளிகளில் வழியாக சந்தனம் காப்பிடப்பட்ட மரகத நடராஜனை தரிசனம் செய்யலாம். உத்தரகோசமங்கையில் உச்சிக்கால பூஜையாக பகல் 12:00 மணிக்கு மரகத மற்றும் ஸ்படிக லிங்கத்திற்கு நாள்தோறும் நித்திய பூஜையாக அபிஷேக ஆராதனைகள் நடந்து வருகிறது. ஆருத்ரா தரிசன விழா ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தான நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.