மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சத்தமின்றி உதவிகள் செய்து வரும் தருமபுரம் ஆதீனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28டிச 2023 08:12
மயிலாடுதுறை; தமிழகத்தின் தென் மாநிலங்களான தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்கள் கடந்த வாரம் பெய்த அதீத கனமழையால் பெருத்த சேதம் ஏற்பட்டது. வெள்ள பாதிப்புக்கு உள்ளான மக்களுக்கு பல தன்னார்வ அமைப்புகளும் உதவிகளை செய்து வருகின்றன. இது குறித்து செய்திகள் வெளிவரும் நிலையில் எந்தவித சத்தமும், விளம்பரமும் இன்றி மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பழமை வாய்ந்த தருமபுரம் ஆதீனம் 27 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த பிரமாச்சாரியார் சுவாமிகள் அருளானையின்படி திருநெல்வேலியில் அமைந்துள்ள தென் மண்டல கட்டளை மடத்தின் சார்பில் கடந்த ஒரு வார காலமாக வெள்ள பாதிப்புக்கு உள்ளான பகுதிகளில் தொடர்ச்சியாக நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டத்திலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தென் மண்டல கட்டளை மடத்தின் மூலமாக ஆதீன கட்டளைத் தம்பிரான் ஸ்ரீமத் திருஞானசம்பந்தர் சுவாமிகள் பொதுமக்களுக்கு தொடர்ந்து நல உதவிகளை வழங்கி வருகிறார். உணவு பொட்டலங்கள், பிஸ்கட், குடிநீர் பாட்டில்கள், போர்வை போன்றவற்றை நான்கு சக்கர வாகனத்தில் எடுத்துச் சென்று பாதிக்கப்பட்ட பகுதிக்கு சென்று நல உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.