பதிவு செய்த நாள்
03
ஜன
2024
12:01
அயோத்தி: அயோத்தி ராமர் கோவிலின் கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ள குழந்தை ராமர் சிலையை, இதுவரை இறுதி செய்யவில்லை என, அக்கோவிலின் அறக்கட்டளை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
உத்தர பிரதேசத்தின் அயோத்தியில், ஸ்ரீராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை சார்பில், பிரமாண்ட ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இதன் கும்பாபிஷேக விழா, வரும் 22ம் தேதி நடக்கவுள்ளது. விழா ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இதற்கிடையே, கோவிலின் கருவறையில் பிரதிஷ்டை செய்ய, மூன்று சிலைகள் தயார் செய்யப்பட்டன. அதில், 5 வயதுடைய குழந்தை வடிவிலான ஒரு சிலையை, அறக்கட்டளை நிர்வாகிகள், ஓட்டெடுப்பு வாயிலாக இரண்டு நாட்களுக்கு முன் தேர்வு செய்ததாக தகவல் வெளியானது. இதை உறுதிப்படுத்தும் வகையில், கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா, தன் சமூக வலைதளத்தில் கர்நாடகாவின் மைசூரைச் சேர்ந்த சிற்ப கலைஞர் அருண் யோகிராஜ் வடிவமைத்த குழந்தை ராமர் சிலை தேர்வாகி இருப்பதாக குறிப்பிட்டார். இந்நிலையில், அக்கோவிலின் அறக்கட்டளை நிர்வாகிகளில் ஒருவரான பிரகாஷ் குப்தா கூறுகையில், இதுவரை கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ள குழந்தை ராமர் சிலையை இறுதி செய்யவில்லை. அறக்கட்டளை நிர்வாகம் சார்பில் எடுக்கப்படும் முடிவை, வெளிப்படையாக தெரிவிப்போம், என்றார்.