பதிவு செய்த நாள்
06
ஜன
2024
07:01
காஞ்சிபுரம் :காஞ்சிபுரம் சங்கரமடம் 68 வது பீடாதிபதி ஜகத்குரு சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 30வது வார்ஷிக ஆராதனை மஹோத்ஸவம், வரும் 8ம் தேதி நடக்கிறது.காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் அருளானையின்படி காஞ்சிபுரம் சங்கர மடத்தில், மஹா பெரியவாள் அதிஷ்டானத்தில், காலை 7:00 மணிக்கு ருத்ர ஏகாதசியும், மதியம் 12:00 மணிக்கு பூர்ணாஹூதியும், மதியம் 1:00 மணிக்கு மஹா பெரியவருக்கு மஹா அபிஷேகமும் நடக்கிறது.
இரவு 7:00 மணிக்கு காஞ்சிபுரம் சங்கரமடத்தில் இருந்து அலங்கரிக்கப்பட்ட தங்க ரதத்தில், நான்கு ராஜ வீதிகளிலும் வாண வேடிக்கையுடன் ஊர்வலம் நடக்கிறது.தேனம்பாக்கம், சிவாஸ்தானத்தில், மூன்று நாள் மஹாருத்ர ஜபம், ஹோமம் நேற்று முன்தினம் துவங்கியது.வரும் 8ம் தேதி காலை 7:00 மணிக்கு பிரும்மபுரீஸ்வரர், மஹா பெரியவருக்கு மஹா ருத்ர கலச அபிஷேகமும், 9:00 மணிக்கு மஹா பெரியவரின் 30வது ஆராதனை மஹோத்ஸவமும், மதியம் 1:00 மணிக்கு மஹா தீப ஆராதனையும் நடக்கிறது.இன்று மாலை 6:00 மணிக்கு ஸ்ரீகாமாக் ஷி அம்பாள் ஸமேத பிரும்மபுரீஸ்வரர் கோவில் பிரம்ம தீர்த்த திருக்குளத்தில் மூன்று நாட்கள் நடக்கும் தெப்போற்சவம் துவங்குகிறது.அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சிவன், பார்வதி, விநாயக பெருமானுடன் மஹா பெரியவர் சந்திரசேகரேந்திர சுவாமிகள் எழுந்தருளி பவனி வருகின்றனர்.முதல் நாள் தெப்போற்சவமான இன்று மாலை 6:00 மணிக்கு மூன்று சுற்றும், நாளை ஐந்து சுற்றும், நிறைவு நாளான நாளை மறுதினம் ஏழு முறையும் திருக்குளத்தில் தெப்பம் வலம் வருகிறது.