கரும்பாறை முத்தையா கோயிலில் ஆண்கள் மட்டுமே பங்கேற்ற அசைவ திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06ஜன 2024 06:01
திருமங்கலம்; மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே அனுப்பப்பட்டி கிராமத்தில் உள்ள கரும்பாறை முத்தையா கோவில் திருவிழா இன்று நடந்தது. இந்த விழாவில் பாரம்பரிய முறைப்படி ஆண் பக்தர்கள் மட்டுமே பங்கேற்றனர். அவர்களுக்கு நூறு ஆடுகள் பலியிடப்பட்டு கறி விருந்து வழங்கப்பட்டது.
அனுப்பப்பட்டியில் காவல் தெய்வமான முத்தையா கோவில் உள்ளது இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதத்தில் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் திருவிழா மற்றும் கறி விருந்து நடைபெறுவது வழக்கம்.இதில் பெண்களுக்கு அனுமதி கிடையாது. கல்வி, வேலை வாய்ப்பு, குழந்தை வரம் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக் கடன்களுக்காக பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் கருப்பு நிற ஆடுகள் ஆடுகள் இந்த கோவிலிலேயே வளர்க்கப்படுகின்றன. இந்த ஆடுகள் மேய்ச்சலுக்காக வயல் மற்றும் விளைநிலங்களில் உணவு தேடி செல்லும் போது யாரும் விரட்ட மாட்டார்கள். முத்தையா சாமியே வந்து தங்களது வயலில் இரை தேடுவதாக நம்பிக்கை வைத்துள்ளனர். இன்று 100 ஆடுகள் பலியிடப்பட்டு 250 மூடை அரிசியில் சாதம் தயாரானது. ஜாதி மத வேறுபாடு இன்றி சமூக நல்லிணத்திற்காக கொண்டாடப்படும் இந்த விழாவில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான ஆண்கள் இந்த விழாவில் கலந்து கொண்டனர். இங்கு பக்தர்கள் உணவு சாப்பிட்டவுடன் இலைகள் எடுக்கப்படாமல் அப்படியே விடப்பட்டு விடும். இலைகள் காய்ந்து காற்றில் பறந்த பின்னரே பெண்கள் அந்த பகுதிக்கு வர அனுமதி உண்டு.