150 வருடங்களுக்கு முன் அயோத்தி சென்று ராமரை தரிசனம் செய்த ஓலைச்சுவடி கண்டெடுப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஜன 2024 07:01
திருப்புவனம்; சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி அருகே நாமனூர் கிராமத்தைச் சேர்ந்த சிலர் 150 வருடங்களுக்கு முன் அயோத்தி கோயிலுக்கு சென்று வந்ததற்கான ஆதாரமாக ஓலைச்சுவடி கண்டெடுத்திருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி அருகே நாமனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன் 60, தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் இவரது தந்தை வழி தாத்தா பெருமாள் என்பவர் அதே ஊரைச் சேர்ந்த ராமசாமி வாத்தியார் என்பவருடன் அயோத்தி சென்றுள்ளார். அயோத்திக்கு பாதயாத்திரையாகவும் ரயில் ( சென்னையில் 1856 ல் முதன் முதலாக ரயில் விடப்பட்டது) மூலமாகவும் சென்று வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த ஓலைச்சுவடியை படிக்க முடியாததால் வரலாற்று ஆய்வாளரும் திருப்புவனம் பற்றிய நூல்களை எழுதி வரும் காசிஶ்ரீ முனைவர் கி.காளைராசனிடம் வழங்கியுள்ளார்.
ஓலைச்சுவடி குறித்து முனைவர் கி.காளைராசன் கூறுகையில் : 1874, ஸ்ரீமுக ஆண்டு இதே தை மாதத்தில் நாமனூரைச் சேர்ந்த ராமசாமி வாத்தியார் என்பவர் நண்பர் பெருமாளுடன் அயோத்தியாபுரி என்றழைக்கப்படும் அயோத்திக்கு சென்று ராமரை தரிசனம் செய்ததுடன் அங்குள்ள லோககுரு என்பவரை சந்தித்து ஆசி பெற்றுள்ளார். யாத்திரை சென்ற ராமசாமி வாத்தியார் அங்கிருந்து ஊஞ்சல் ஒன்றையும் ஞாபகார்த்தமாக வாங்கி வந்துள்ளார். வாத்தியார் என்பதால் காசி, அயோத்தியாபுரி சென்று வந்ததை ஓலைச்சுவடியில் எழுதி வைத்துள்ளார். 57செ.மீ., நீளமும் நான்கு செ.மீ., அகலமும் கொண்ட இந்த ஓலைச்சுவடியில் நெருக்கமாக எழுதி வைக்கப்பட்டுள்ளது. ஐந்து முதல் ஏழு சுவடிகளை கொண்ட 11 கட்டு ஓலைச்சுவடிகள் உள்ளன. இதில் சிந்தாமணி, ராமாயணம், மகாபாரதம் உள்ளிட்டவைகளும் ஜோதிடம் பார்க்க பயன்படும் 12 ராசிகளுக்கு உரிய வாய்ப்பாடும் உள்ளது. காசியில் இருந்து கொண்டு வந்த ஊஞ்சலில் தூக்குமூச்சி அய்யனார் இருப்பதாக கிராமமக்கள் நம்புகின்றனர். எனவே இந்த ஊஞ்சலை அங்குள்ள திருவினை அய்யனார் கோயிலில் வைத்து வழிபட்டு வருகின்றனர். மேலும் ராமாயண கதைகளை மூலிகைகள் மூலம் ஓவியங்களாக கோயிலில் ராமசாமி வாத்தியார் வரைந்துள்ளார். கோயிலிலும் ஓலைச்சுவடிகள் வைத்து வழிபட்டு வருவதாக தெரிகிறது, என்றார். பழம்பெரும் காவியங்களின் ஆதாரமாக கருதப்படும் ஓலைச்சுவடிகளை நகல் எடுத்து ஆய்வு செய்ய வேண்டும் என பலரும் வலியுறுத்தியுள்ளனர்.