பதிவு செய்த நாள்
15
ஜன
2024
07:01
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் 22ம் தேதி என்றாலும், இப்போது முதலே அயோத்திக்கு வரும் மக்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
வரக்கூடிய மக்களில் பெரும்பாலானவர்கள் தாங்கள் அயோத்தி சென்று வந்ததன் அடையாளமாக, மரத்தால் செய்யப்பட்ட ராமர் கோவிலின் மாதிரி சிற்பத்தை வாங்கி செல்கின்றனர். ஜெய் ஸ்ரீராம் என்று எழுதப்பட்ட மோதிரம், கை வளையங்கள் உள்ளிட்ட பொருட்கள் விற்கப்பட்டாலும், மாதிரி சிற்பத்தின் விற்பனை களைகட்டியுள்ளது. இந்த மர சிற்பங்கள், 100 முதல் 8,000 ரூபாய் வரை விதவிதமான அளவில் விற்கப்பட்டாலும், பாக்கெட் அளவிலான, 100 ரூபாய் மாதிரி சிற்பத்தையே மக்கள் அதிகம் வாங்கி செல்கின்றனர். இங்கு, 10 அடிக்கு ஒரு கடை இருந்தாலும், அத்தனை கடைகளிலும் இந்த மாதிரி சிற்பங்கள்தான் அதிகம் விற்கின்றன.
இதன் வாயிலாக, ஒரு நாளில் ஆயிரக்கணக்கான சிறு வியாபாரிகளின் குடும்பங்களுக்கு, இந்த ராமர் கோவில் மாதிரி சிற்பம் படியளந்து கொண்டு இருக்கிறது. இந்த சிற்பங்களை, குடிசைத் தொழிலாக பலர் தயாரித்து வருகின்றனர். அவர்களில் ஒருவரான ஆதித்யா சிங் கூறியதாவது: நீண்ட காலமாக விளம்பர பிளக்ஸ் போர்டு தயாரித்து வந்தேன். இப்போது அதை ஓரங்கட்டிவிட்டு ராமர் கோவில் சிற்பம் தயாரிப்பதில் இறங்கிவிட்டேன். டில்லியில் இருந்து தருவிக்கப்படும் சுற்றுச் சூழலுக்கு தீங்கு விளைவிக்காத பைன்வுட் மரத்தகடுகளை வைத்து இந்த சிற்பங்கள் தயார் செய்யப்படுகின்றன. ஒருவர் ஒரு நாளைக்கு ஐந்து சிற்பங்கள் தான் தயார் செய்யமுடியும். இப்போதைக்கு 25 பேர் இரவு, பகலாக வேலை செய்கின்றனர். எவ்வளவு பேர் வந்தாலும் வேலை இருக்கிறது.
ஆனால், நுட்பமான வேலைப்பாடு என்பதால் நிறைய பேர் இந்த வேலைக்கு வருவது இல்லை. 1,000 ரூபாய்க்கு மேல் உள்ள சிற்பங்களில், உள்ளே ராமர் உருவம் இருக்கும்; விளக்கு எரியும்; ராம் ராம் என்று சங்கீதம் ஒலிக்கும். மக்கள் வீடுகளில் வைத்துக் கொள்ளவும், பரிசளிக்கவும் சிறிய சிற்பங்களையே விரும்பி வாங்குகின்றனர். இதற்கு அதிக கிராக்கி இருப்பதால், ஒரு வியாபாரிக்கு 25 சிற்பங்களுக்கு மேல் கொடுப்பதில்லை. நாளுக்கு நாள் அதிகரிக்கும் தேவையைப் பார்த்தால், இன்னும் பல ஆண்டுகளுக்கு இந்த தொழில் பலருக்கும் சோறு போடும் என தெரிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.