பதிவு செய்த நாள்
16
ஜன
2024
12:01
அயோத்தி: ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு அடுத்த நாளான ஜனவரி 23ம் தேதி முதல் ராமர் கோயில் பொதுமக்கள் தரிசனத்திற்காக திறக்கப்படும் என ஸ்ரீராம் ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் பொதுச்செயலாளர் சம்பத் ராய் தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் கும்பாபிஷேகம் வரும் 22ம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் ராமரின் குழந்தை வடிவிலான சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. ராமர் கோயிலை பிரதமர் நரேந்திர மோடி வரும் 22ல் திறந்து வைக்கிறார். கும்பாபிஷேகம் தொடர்பாக ஸ்ரீராம் ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் பொதுச்செயலாளர் சம்பத் ராய் கூறியதாவது: ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்கான மத சடங்குகள் ஜன.,16ல் துவங்கி 21ம் தேதி வரை நடக்கும். பிரதிஷ்டை செய்யப்படும் சிலை சுமார் 150 முதல் 200 கிலோ வரை இருக்கும். ஜன.,18ல் கோயில் கர்ப்ப கிரஹத்தில் சிலை நிறுவப்படும். ராமர் கோயிலின் திறப்பு விழாவில் பிரதமர் மோடி, ஆர்எஸ்எஸ் தலைவர், உ.பி., முதல்வர், உ.பி., கவர்னர் மற்றும் அனைத்து கோயில் அறங்காவலர்களும் கலந்து கொள்கின்றனர். 150க்கும் மேற்பட்ட துறவிகள், பல்வேறு துறைகளை சேர்ந்த வல்லுநர்கள் மற்றும் பத்ம விருது பெற்றவர்களும் நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டுள்ளனர். கும்பாபிஷேகத்திற்கு அடுத்த நாளான ஜனவரி 23ம் தேதி முதல் ராமர் கோயில் பொதுமக்கள் தரிசனத்திற்காக திறக்கப்படும். ஜன.,22ல் பிற்பகல் 1 மணிக்குள் கும்பாபிஷேகம் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாரம்பரியத்தின்படி, நேபாளத்தின் ஜனக்பூர் மற்றும் மிதிலா பகுதிகளில் இருந்து 1000 கூடைகளில் பரிசுகள் வந்துள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.