திருவாவடுதுறை ஆதீனம் குரு முதல்வர் நமச்சிவாய மூர்த்திகள் குருபூஜை விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஜன 2024 05:01
மயிலாடுதுறை: திருவாவடுதுறை ஆதீனம் குரு முதல்வர் நமச்சிவாய மூர்த்திகள் குருபூஜை விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற பேரூர் ஆதீனம் 25வது குருமகாசந்நிதானம் தவத்திரு மருதாச்சல அடிகளார் நிருபர்களிடம் கூறுகையில்; தமிழகத்தின் சைவ சித்தாந்தத்தை வடிவமைத்துக் கொடுத்ததில் முதன்மையானவர் மெய்கண்டார். சிவஞானபோதத்தை தந்தவரும் அவர்தான். அவர் ஞானம் பெற்ற திருவெண்ணைநல்லூர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் மெய்கண்டார் சிலை பிரமாண்டமாக அமைக்க வேண்டும். திருவாவடுதுறை ஆதீனத்தை நெறியாளராக கொண்டு செயல்படுத்திட அடியார்கள் ஆயத்தமாக இருக்கிறார்கள். கோயில் இடம் அல்லது அரசு இடத்தில் அமைய தமிழக அரசு துணை நிற்க வேண்டும்.
மெய்ண்டாருக்கு பெரிய அளவில் சிலை அமைத்து 274 தலங்களையும் இடம்பெற செய்யலாம். திருவெண்ணைநல்லூர் தேசிய நெடுஞ்சாலையில் மெய்கண்டார் சிலை அமைப்பதன் மூலம் சென்னையில் இருந்து தென் தமிழகம் செல்லக்கூடிய அனைவரும் எளிதில் அங்கு வந்து சென்று பார்வையிட்டு வழிபட்டு பயன்பெற ஏதுவாக அமையும். இது குறித்து தமிழக அரசு உடனடியாக பரிசீலினை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ராமபிரான் அவதரித்த அயோத்தியில் நீண்ட நாட்களாக கோயில் எழுப்ப வேண்டும் என்ற பலரின் தவம் தற்போது நிறைவேறியுள்ளது. இந்து அமைப்புகள் அதில் பெரும் பங்காற்றியுள்ளனர். ராமர் கோயில் மிக அழகிய வேலைபாடுகளுடன் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது.
அயோத்தியின் ஒரு சேர பக்தர்கள் வந்தால் சிரமம் என்பதை சரியாக திட்டமிட்டு, வீட்டிலிருந்தபடியே ராமர் சிலை பரிதிஷ்டை செய்யக்கூடிய 22ம் தேதி மதியம் 12 மணி முதல் 2 மணி வரை ஒவ்வொருவரும் தங்கள் வீடுகளில் விளக்கேற்றி அட்சதையை தலையில் போட்டுக்கொண்டு ராம நாமத்தை ஓதி சிறப்பு வழிபாடு செய்ய வேண்டும். அன்றைய தினம் மாலை நேரத்திலும் வீடுகளில் சிறப்பு வழிபாடு செய்யலாம். தைப்பூச நாட்களில் அனைத்து பக்தர்களும் வழிபட ஏதுவாக முருகனின் அறுபடை கோயில்களில் சிறப்பு கட்டணம் ஏதும் இல்லாமல் வழிவகை செய்ய அரசு ஆவண செய்ய வேண்டும். பழனி முருகனுக்கு பங்குனி உத்திரம் மற்றும் தைப்பூசத்தன்று பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்து வருகிறார்கள். காவடி எடுத்து வரக்கூடிய பக்தர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் மூலவருக்கு அதனை கொண்டு அபிஷேகம் செய்ய முடியாவிட்டாலும் உற்சவர் அமைத்து அவர்கள் கண் முன் அபிஷேகம் நடத்திட முன் வந்தால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைவார்கள் அதற்கும் அரசு ஆவண செய்ய வேண்டும் என்றார்.