ஆந்திராவின் வீரபத்ரர் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஜன 2024 05:01
விஜயவாடா: ஆந்திராவின் லேபக்ஷியில் உள்ள வீரபத்ரர் கோயிலில் பிரதமர் மோடி இன்று(ஜன.,16) வழிபாடு நடத்தினார்.
அயோத்தியில் கட்டப்பட்ட ராமர் கோயில் கும்பாபிஷேகம் வரும் 22ம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு 11 நாள் விரதம் இருப்பதாக கடந்த 12ம் தேதி பிரதமர் மோடி அறிவித்தார். அன்றைய தினம் மஹாராஷ்டிராவில் கோதாவரி நதிக்கரையில் உள்ள ராம்குந்திற்கு சென்று வழிபாடு நடத்தினார். பிறகு பஞ்சவடியில் உள்ள கல்ராம் கோயிலுக்கு சென்ற மோடி பிரார்த்தனை செய்தார். அதற்கு முன்னர் கோயில் வளாகத்தை சுத்தம் செய்யும் பணியிலும் மோடி ஈடுபட்டார். இந்நிலையில், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இன்று ஆந்திரா சென்றுள்ள பிரதமர் மோடி, லேபக்ஷி பகுதியில் உள்ள வீரபத்ரர் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வழிபாடு நடத்தினார். கோயிலுக்கு வந்த மோடியை நிர்வாகிகள் வரவேற்றனர். கேரளா செல்லும் பிரதமர் மோடி நாளை காலை 7:30 மணிக்கு குருவாயூர் கோயிலிலும், வரும் 21 ம் தேதி திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாத சுவாமி கோயிலிலும், ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலிலும் சாமி தரிசனம் செய்ய உள்ளார்.