பதிவு செய்த நாள்
17
ஜன
2024
07:01
அயோத்தி,: உத்தர பிரதேசத்தின் அயோத்தி நகரில் நிர்மாணிக்கப்படும் ராமர் கோவில் திறப்பு விழாவுக்கான பாரம்பரிய சடங்குகள் நேற்று யாகத்துடன் துவங்கின. 21ம் தேதி வரை தொடரும் சடங்குகளை அடுத்து மறுநாள் கும்பாபிஷேகம் நடந்தேறும்.
இது குறித்து, ராமர் கோவில் அறக்கட்டளை பொதுச் செயலர் சம்பத் ராய் கூறியதாவது; ஆகம, வேத சம்பிரதாயங்களின்படி கும்பாபிஷேகத்துக்கு முன்பான சடங்குகள் துவங்கியுள்ளன. பிராயசித்த பூஜையும், கர்மகுடி பூஜையும் நடத்தப்பட்டன.
முதல் நாள் யாகத்தில், 11 வேத விற்பன்னர்கள் பங்கேற்றனர். கோவிலின் தலைமை பூஜாரி ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் மேற்பார்வை செய்கிறார். காசியைச் சேர்ந்த லக் ஷிகாந்த் தீட்சித் தலைமையில் பூஜைகள் நடக்கின்றன. கணேஷ்வர் சாஸ்திரி டிராவிட் தலைமையில், 121 வேத விற்பன்னர்கள் பங்கேற்கின்றனர். இன்று பால ராமர் விக்ரகத்துடன் ஊர்வலம் நடைபெறும். பரிசர் பிரவேஷ் என்பது அதற்கான பெயர். அயோத்தி கோவில் வளாகத்தில் ராமர் பிரவேசம் செய்வதை குறிக்கும் நிகழ்வு இது.
நாதஸ்வர இசை: ஒரு வார சடங்குகளின்போது, ஒவ்வொரு மாநிலத்தின் பாரம்பரியமான இசைக் கருவிகளின் மங்கல இசை நிகழ்ச்சி இடம்பெறும். தமிழகத்தில் இருந்து நாதஸ்வரம் மற்றும் மிருதங்கம் வாசிக்கப்படும். திறப்பு விழாவில் 8,000 சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்க இருக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 50 நாடுகளை சேர்ந்த 53 விருந்தினர்கள் வரவுள்ளனர். திறப்பு விழாவுக்கு பின், 26ம் தேதி முதல் ஆர்.எஸ்.எஸ். மற்றும் வி.எச்.பி. தொண்டர்கள், குழுக்களாக அனுமதிக்கப்படுவர். அடுத்த மாதம் வரை இது தொடரும். கோவில் கட்டுமானம் முழுமை பெறுவதற்குள் கும்பாபிஷேகம் நடத்துவதா என சிலர் விமர்சிக்கின்றனர். தேவையற்ற கேள்விகளுக்கு பதில் அளிக்க விரும்பவில்லை.இவ்வாறு ராய் கூறினார்.
108 அடி நீள ஊதுவத்தி; அயோத்தியில் நேற்று 108 அடி நீளமான ஊதுவத்தி ஏற்றப்பட்டது. ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை நிர்வாகி மஹந்த் நிருத்ய கோபால் தாஸ் அதை ஏற்றி வைத்தார்.குஜராத்தின் வதோதராவில் பசுஞ்சாணம், நெய், மலர்கள், மூலிகைகளால் தயாரிக்கப்பட்டது இந்த ஊதுவத்தி, மூன்றரை அடி அகலம், 3,610 கிலோ எடை உள்ளது. ஒன்றரை மாதங்களுக்கு இது எரியும் என கூறப்படுகிறது.
வலியுடன் வடித்த ராமர் சிலை; அயோத்தி ராமர் கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ள குழந்தை ராமர் சிலையை, கர்நாடகாவின் மைசூரு சிற்பி அருண் யோகிராஜ் உருவாக்கியுள்ளார். இதுகுறித்து அவரது மனைவி விஜேதா கூறுகையில், குழந்தை ராமர் சிலையை என் கணவர் வடிக்கும்போது, கூர்மையான கல் அவரது கண்ணில் பாய்ந்தது. அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. கண்களில் வலியுடன், பல நாள் துாக்கம் துறந்து பணியை செய்து முடித்தார், என்றார்.
ஏ.ஐ. கேமரா கண்காணிப்பு: அயோத்தி நகருக்கு இப்போதே தினம் லட்சம் பேருக்கு மேல் வருகின்றனர். காலணியை கழற்ற வேண்டாம் என போலீஸ் சொல்கிறது. சிறு கற்கள் கிடப்பதால் அந்த அறிவுரை. திறப்பு விழா நாளில் அழைப்பாளர்கள் 8,000 பேர் தவிர எவரும் நுழைய முடியாது. மாவட்டம் முழுதும் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. சீருடை அணியாத போலீசாரும் ரோந்து வருகின்றனர். நாளை முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது. 10,000 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கோவிலை சுற்றிலும் ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட அதி நவீன கேமராக்கள் பொருத்தப்படும். இவை, ஒவ்வொருவரையும் அடையாளம் காணும் ஆற்றல் படைத்தவை.