பதிவு செய்த நாள்
18
ஜன
2024
11:01
சென்னை; தி.நகர்., திருமலை திருப்பதி தேவஸ்தான பெருமாள் கோவிலுக்கு வருகை தந்த கவர்னர் ரவி, அங்கு நிறுவப்பட்டிருந்த ராமர் சிலையை தரிசனம் செய்தார்.
ஆயோத்தி ராமர் கோவிலில் பிராணப் பிரதிஷ்டை வரும், 22ம் தேதி நடக்கவுள்ளது. அதனை் முன்னிட்டு திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில், தி.நகர் பெருமாள் கோவிலில் ராமர் சிலை நிறுவப்பட்டு தினசரி ஆன்மிக கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இன்று இரவு தமிழக கவர்னர் ரவி தனது மனைவியுடன் தி.நகர் பெருமாள் கோவிலுக்கு வந்தார். அவரை டி.டி.டி., தமிழக ஆலோசனைக் குழு தலைவர் சேகர் மலர் கொத்து கொடுத்து வரவேற்றார். இதையடுத்து, கோவில் சார்பில் மரியாதை செய்யப்பட்டது. பின், கோவில் முகப்பில் நிறுவப்பட்டுள்ளது ராமர் சிலை தரிசித்து, மூலவர் வெங்கடேஷ்வரரையும் தரசித்தார். இதையடுத்து, மேடையில் நடந்த பிரபல பரதநாட்டியக் கலைஞர் பத்மாசுப்ரமணியனின் நடனத்தையும் கண்டு ரசித்தார். பின், அவருக்கு சால்வை அணிவித்த கவர்னர் மரியாதை செலுத்தினார்.
டி.டி.டி., தமிழக ஆலோசனை குழு தலைவர் சேகர் கூறியதாவது: அயோத்தி ராமர்கோவில் பிராணப் பிரதிஷ்டை முன்னிட்டு, டி.டி.டி., தி.நகர் கோவிலில் ராமர் சிலை நிறுவப்பட்டு வரும், 26ம் தேதி வரை ஆன்மிக கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதில், இன்று தமிழக கவர்னர் ரவி பங்கேற்று ராமபிரானை தரிசித்து, கலை நிகழ்ச்சியை கண்டு ரசித்தார். இந்நிகழ்ச்சியில் வரும் கலைஞர்களுக்கு முக்கியத்துவம் தரப்பட்டு வருகிறது. வரும், 22ம் தேதி தி.நகர் பெருமாள், தாயார் கோவிலில் காலை 7:00 முதல் இரவு 9:00 மணிவரை தேவஸ்தானம் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கவுள்ளன. ஏராளமான வேதபண்டிதர்கள் பங்கேற்கின்றனர். அன்று முழுவதும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.