பதிவு செய்த நாள்
18
ஜன
2024
10:01
மயிலாடுதுறை; திருவாவடுதுறை ஆதீனத்தில் கோலாகலமாக நடைபெற்ற பட்டண பிரவேச நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு குருமகா சன்னிதானத்தை தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா திருவாவடுதுறை ஆதீனத்தை14ம் நூற்றாண்டில் தோற்றுவித்தவர் நமச்சிவாய மூர்த்திகள். அவரது குருபூஜை விழா தை - அசுவதியான இன்று காலை தோத்திரப் பாடல் பாராயணத்துடன் தொடங்கியது. தொடர்ந்து குரு முதல்வர் நமச்சிவாய மூர்த்திக்கு சிறப்பு மகா அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. இதனை அடுத்து நாதஸ்வர வித்துவான் கார்த்திக் பணியை பாராட்டி நாதஸ்வர கலாநிதி எனும் விருதும், தவிலிசை வித்வான் நடராஜன் பணியை பாராட்டி தமிழிசை திலகம் எனும் விருதும், திருச்சி சொக்கலிங்க ஓதுவார், கல்லிடைக்குறிச்சி சிவசங்கர் ஓதுவார் ஆகியோரின் திருமுறை பணிகளைப் பாராட்டியும், மதுரை ஞானப்பூங்கோதை, விக்கிரமசிங்கபுரம் சண்முகம் ஆகியோரின் சைவ சித்தாந்த பணிகளை பாராட்டி ஆதீன சைவ சித்தாந்த அறிஞர் எனும் விருதும், தலா ரூ.5 ஆயிரம் பொற்கிழியும் வழங்கப்பட்டது.
தொடர்ந்து கவிராட்சச கச்சியப்ப முனிவர் அருளிய திருவானைக்காப் புராணம் மூலமும், உரையும் எனும் நூலை ஆதீனம் 24 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் வெளியிட்டருள்ள முதல் பிரதியை செங்கோல் ஆதீனம் 103 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக சத்தியஞான பரமாசார்ய சுவாமிகள், சிவபுரம் ஆதீனம் குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ திருநாவுக்கரசு சுவாமிகள், வேளாக்குறிச்சி ஆதீன இளவரசு ஸ்ரீ அஜபா நடேஸ்வர சுவாமிகள், துலாவூர் ஆதீன இளவரசு சுவாமிகள், திருவாவடுதுறை ஆதீனம் திருச்சிற்றம்பல தம்பிரான், வேலப்ப தம்பிரான், அருணாச்சல தம்பிரான் சுவாமிகள் மற்றும் மதுரை ஆதீனம் பிரதிநிதிகள் உட்பட பலர் பெற்றுக் கொண்டனர். சிதம்பரம் நடராஜர் கோயில் மற்றும் ஆதீன கோயில்கள் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. மதியம் மாகேஸ்வர பூஜை நடந்தது.
மாலை திருவையாறு சுவாமிநாதன் குழுவினரின வீணை இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. இரவு ஆதீனம் 24வது குருமகா சன்னிதானம் கோமுக்தீஸ்வரர் கோயிலில் வழிபாடு நடந்தது. பின்னர் குருமுதல்வர் நமச்சிவாய மூர்த்திகள் சன்னதியில் திருவிடைமருதூர் ஆதீனம் மேல்நிலைப்பள்ளி 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் முதலிடம் பெற்ற பாரதி, 12ம் வகுப்பில் முதலிடம் பெற்ற மதுமிதா ஆகியோருக்கு அருட்கொடை மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து இரவு ஆதீனம் 24வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் ஒரு லட்சத்து எட்டு ருத்ராட்ச மணிகளால் ஆன தலைவடம், பவளமணி, கெண்டைமணி, பட்டு தலைக்குஞ்சம் அலங்காரத்துடன் தங்கப் பாதரட்சை அணிந்து, சிவிகை பல்லக்கில் சிவிகாரோஹணம் செய்தருளினார். தொடர்ந்து, பல்லக்கின் முன்னே குதிரைகள் ஆட்டத்துடன், வான வேடிக்கை முழங்க, பக்தர்கள் பல்லக்கினை சுமந்து செல்ல பட்டணப்பிரவேசம் நடைபெற்றது. நிறைவாக திருமடத்தின் கொலு மண்டபத்தில் சிவஞானக் கொலுக்காட்சியும் நடந்தது. பட்டணப்பிரவேசத்தை முன்னிட்டு மயிலாடுதுறை எஸ்பி. மீனா தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.