விழா கோலம் பூண்டது அயோத்தி; எங்கெங்கும் காவி கொடி.. பக்தர்களின் ராமகோஷம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19ஜன 2024 12:01
அயோத்தி: ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அயோத்தி நகரம், சாலைகள் புதுப்பிக்கப்பட்டு புதுவண்ணங்களால் ஜொலிக்கிறது. சாலைகள் எங்கும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. எங்கெங்கும் காவி கொடியுடன், பக்தர்களின் ராமகோஷம் கேட்கிறது.
ராமஜென்ம பூமியான அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலின் கருவறையில் பால ராமர் சிலையை வரும் 22ம் தேதி பிரதமர் மோடி நிறுவ உள்ளார். விழாவில் இந்து மத தலைவர்கள், துறவிகள், அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர்கள் என ஏராளமான பிரபலங்கள் கலந்து கொள்கின்றனர். ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து எடுத்து வரப்பட்ட கற்களை குடைந்து, 350க்கும் மேற்பட்ட தூண்கள் மூலம் ராமர், சீதைக்கு கருவறைகள் அமைக்கப்பட்டுள்ளன. உலகமே ராமர் கோவில் கும்பாபிஷேகத்தைப் பற்றி பேச வேண்டும் என்பதற்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. 12 ஆண்டுகளுக்கு முன் சேறும் சகதியுமாக சாலைகள் இருந்தது. இப்போது நம்பமுடியாத அளவிற்கு தூய்மைப்படுத்தப்பட்டு அகலப்படுத்தப்பட்டுள்ளன. கும்பாபிஷேகத்தை தரிசிக்க ஜன. 21 மற்றும் 22ம் தேதியே பக்தர்கள் கூட்டம் குவியும். தற்போது இன்றே எங்கெங்கும் காவி கொடி, பக்தர்களின் ராமகோஷம் என விழா கோலம் பூண்டுள்ளது ராமபூமி.