பதிவு செய்த நாள்
20
ஜன
2024
02:01
புள்ளம்பூதங்குடி; சுவாமிமலை – திருவையாறு வழியில் 4 கி.மீ., தொலைவில் உள்ளது புள்ளம்பூதங்குடி. ராவணன் சீதையை கவர்ந்து சென்ற போது ஜடாயு தடுக்க முயன்றது. வாளால் அதன் இறகை ராவணன் வெட்டினான். அவ்வழியாக வந்த ராம, லட்சுமணரிடம் ஜடாயு நடந்ததை சொல்லி உயிர் நீத்தது. ஜடாயுவுக்கு இறுதிக்கடனை ராமர் இத்தலத்தில் செய்தார்.
செதிலபதி; மயிலாடுதுறை – திருவாரூர் சாலையில் உள்ள பூந்தோட்டம் அருகிலுள்ளது செதிலபதி. இங்கு ராமர் தனது தந்தை தசரதருக்கும், ஜடாயுவுக்கும் தர்ப்பணம் செய்தார். தர்ப்பணத்தின் போது பிண்டம் பிடிக்கும் சடங்கு நடக்கும். ராமர் பிடித்த பிண்டங்கள் சிவலிங்கங்களாக மாறின. முன்பு திலதர்ப்பணபுரி என இருந்தது. தற்போது செதிலபதி எனப்படுகிறது.
ராமர் பாதம் ; வேதாரண்யம் – கோடியக்கரை சாலையில் 3கி.மீ., தொலைவில் உள்ளது ராமர் பாதம். சீதையை மீட்பதற்காக ராமன் வேதாரண்யம் வந்தார். இங்குள்ள மணல் மேட்டில் (25 அடி) இருந்து பார்த்த போது ராவணனின் கோட்டையின் பின்புறம் தெரிந்தது. பின்புறமாகச் சென்று தாக்குவது வீரனுக்கு அழகல்ல என்பதால் பின்னர் ராமேஸ்வரம் சென்றார். ராமர் கால் பதித்த மண் மேடே ராமர் பாதம் எனப்படுகிறது.
கோதண்ட ராமர் கோயில்: ராமேஸ்வரம் – தனுஷ்கோடி செல்லும் வழியில் 12 கி.மீ., துாரத்தில் கோதண்டராமர் கோயில் உள்ளது. ராமனிடம் சரணடைவதற்காக ராவணனின் சகோதரனான விபீஷணன் ராமேஸ்வரம் வந்தான். அவனை தன் தம்பியாக ஏற்ற ராமர், இலங்கையை வெற்றி பெறும் முன்பே அவனுக்கு பட்டாபிஷேகம் செய்து வைத்த தலம் இது.
கந்த மாதன பர்வதம்: ராமேஸ்வரத்தில் இருந்து 4 கி.மீ., துாரத்தில் கந்த மாதன பர்வதம் உள்ளது. இங்குள்ள மணல் குன்றே ராமேஸ்வரத்தின் உயரமான பகுதி. சீதையை தேடி வந்த ராமர் இக்குன்றின் மீது நின்று இலங்கையை நோக்கினார். இங்குள்ள இரண்டடுக்கு மண்டபத்தில் ராமர் பாதம் உள்ளது.
திருப்புல்லாணி: ராமநாதபுரத்தில் இருந்து 8 கி.மீ. துாரத்தில் உள்ளது திருப்புல்லாணி. கடலில் பாலம் அமைப்பதற்காக கடல் அரசனான வருணதேவனிடம் அனுமதி பெற ராமர் இங்கு மூன்று நாள் இருந்தார். அப்போது ராமர் தலையணையாக புல்லை வைத்து படுத்து இருந்ததால் இது திருப்புல்லணை எனப்பட்டது. தற்போது திருப்புல்லாணி என அழைக்கப்படுகிறது.
தேவிபட்டினம்: ராமநாதபுரத்தில் இருந்து 10 கி.மீ. தொலைவில் தேவிபட்டினம் உள்ளது. சீதையை ராவணன் துாக்கிச் செல்ல நவக்கிரக தோஷமே காரணம் என்றும், அதனை போக்க நவக்கிரக வழிபாடு செய்ய வேண்டும் என அசரீரி கேட்டது. ராமரும் இலங்கை செல்ல பாலம் அமைக்கும் முன் நவபாஷாணத்தால் ஆன நவக்கிரகங்களை கடலில் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அப்போது கடலில் ஏற்பட்ட கொந்தளிப்பை தன் வலதுகையை உயர்த்தி அடக்கினார். இதனால் ‘கடல் அடைத்தப் பெருமாள்’ என்னும் பெயரில் இங்கு கோயில் கொண்டிருக்கிறார்.
ஏகாந்த ராமர் : பாம்பன் அருகிலுள்ள தங்கச்சிமடத்தில் ராமர் கோயில் உள்ளது. இங்கு தனியாக அமர்ந்து சீதையைப் பற்றி ராமர் சிந்தித்தார். இதனால் இவர் ஏகாந்தராமர் என அழைக்கப்படுகிறார்.
சேதுக்கரை: திருப்புல்லாணியில் இருந்து 4 கி.மீ., துாரத்தில் உள்ளது சேதுக்கரை. ராமன் இங்கிருந்துதான் இலங்கை செல்ல பாலம் அமைத்தார். சேது என்றால் அணை. அணை கட்டிய இடத்திலுள்ள கரை என்பதால் இதனை சேதுக்கரை என்கின்றனர். இங்கு ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. இவர் இலங்கையை பார்த்தபடி உள்ளார்.
தனுஷ்கோடி: தனுஷ் என்பது வில். கோடி என்பது முனை. இந்தியப் பெருங்கடலும் வங்கக் கடலும் சேரும் இத்தலத்தில் நீராடுவது புனிதமானதாகும்.
ராமேஸ்வரம்: ராவணனைக் கொன்ற பாவம் தீர சிவ பூஜை செய்ய விரும்பினார் ராமர். அதற்காக சிவலிங்கம் கொண்டு வருமாறு அனுமனை காசிக்கு அனுப்பினார். அவர் வர தாமதமாகவே, கடற்கரை மணலில் சிவலிங்கம் அமைத்தாள் சீதை. இதையே ராமேஸ்வரம் ராமநாதசுவாமி என அழைக்கிறோம்.
உப்பூர்; ராமநாதபுரத்தில் இருந்து 30 கி.மீ., துாரத்தில் உப்பூர் உள்ளது. இலங்கைக்கு செல்லும் முன் ராமர் இங்குள்ள வெயிலுகந்த விநாயகரை வழிபட்டார்.
வேதாரண்யம்: நாகப்பட்டினத்தில் இருந்து 45 கி.மீ, தொலைவில் வேதாரண்யம் உள்ளது. ராவணனைக் கொன்ற பாவம் தீர ராமர் இங்கு கடலில் நீராடினார்.