அயோத்தி பிராண பிரதிஷ்டை; ராமாயணத்தோடு தொடர்புள்ள ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஜன 2024 03:01
மானாமதுரை; அயோத்தியில் ராமர் பிராண பிரதிஷ்டை விழாவை முன்னிட்டு ராமாயணத்தோடு தொடர்பு உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மானாமதுரையில் ராமர் வானர படைகளுக்கு வீரத்தை உண்டாக்கும் வகையில் உபதேசம் செய்ததின் நினைவாக கட்டபட்ட ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ராமாயண காலத்தில் ராமர் இலங்கை சென்று போரிட வானர படைகளை அனுமன் தலைமையில் தயார் செய்து அனுப்பிய போது மானாமதுரை பிருந்தாவன காட்டிற்கு வந்த வானர படைகள் அங்கு உள்ள பழங்கள் மற்றும் இயற்கை உணவுகளை உண்டு மயங்கின. இலங்கை சென்று போரிடுவதை மறந்து காட்டில் மயங்கியிருந்த போது அங்கு வந்த ராமர், வானர படைகளுக்கு எதற்காக நாம் வந்தோமோ அதை மறக்க கூடாது,செய்கின்ற பணிகளை கவனமுடன் பல கஷ்டங்கள் வந்தாலும் கடமையை முடித்து காட்ட வேண்டும் என உபதேசம் செய்தார். ராமரின் உபதேசத்தை வானர படைகள் தலை வணங்கி ஏற்று கொண்டு ஒற்றுமையுடன் அனுமன் தலைமையில் இலங்கை செல்ல கடலில் பாலம் அமைத்து சென்று போரில் வென்று சீதையயை மீட்டு வந்தனர். அதன் நினைவாக மாவலி மன்னர் வீர அழகர் கோவிலை மானாமதுரை வைகை ஆற்றங்கரையில் கட்டி அதில் வீரஆஞ்சநேயர்க்கு தனிசன்னதியும் அமைத்தார்.வானர படைகள் இங்கு வீரம்பெற்றதால் வானரவீரமதுரையாக இருந்து பின் மருவி மானாமதுரை என தற்போது அழைக்கபடுகிறது. ராமர், அனுமார் பாதம் பட்ட பகுதியாக மானாமதுரை உள்ளது. மானாமதுரை பகுதியில் இன்றும் ஏராளமான ஆஞ்சநேயர் கோவில்கள் உள்ளது. இன்று அயோத்தியில் ராமர் கோவில் பிராண பிரதிஷ்டை விழாவை முன்னிட்டு மானாமதுரையில் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடும்,பல தெருக்களில் ராமர் படத்துடன் ரங்கோலி கோலமிட்டும் கொண்டாடி வருகின்றனர்.