தைப்பூச தெப்ப தேர் : ஜன., 25ல் ராமேஸ்வரம் கோயில் நடை சாத்தல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஜன 2024 03:01
ராமேஸ்வரம்; ராமேஸ்வரத்தில் ஜன.,25ல் தைப்பூச தெப்ப தேரோட்டம் நடக்க உள்ளது. இதனால் ராமேஸ்வரம் கோயில் நடை சாத்தப்படும் என கோயில் ஆணையர் தெரிவித்தார்.
ஜன., 25ல் தைப்பூசம் தெப்ப தேரோட்டத்தையொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் அன்று அதிகாலை 4 மணிக்கு நடை திறந்து அதிகாலை 5 மணி முதல் 5:30 மணி வரை படிகலிங்க பூஜை நடக்கும். இதனை தொடர்ந்து கால பூஜை, உச்சிக்கால பூஜை, சாயரட்சை பூஜைகள் நடந்து முடிந்ததும், காலை 10 மணிக்கு கோயிலில் இருந்து ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் பஞ்சமூர்த்திகளுடன் தங்க ரிஷப வாகனத்தில் புறப்பாடாகி திருக்கோயிலின் உபகோயிலான லட்சுமணேஸ்வரர் கோயிலில் எழுந்தருள்வார்கள். பின் மாலை 5 மணிக்கு லட்சுமணேஸ்வரர் கோயில் தெப்ப மண்டபத்தில் மகா தீபாராதனை நடக்கும். பின் மாலை 6 முதல் இரவு 7 மணிக்குள் அலங்கரிக்கப்பட்ட தெப்ப தேரில் சுவாமி, அம்மன் எழுந்தருளியதும் தைப்பூச தெப்ப தேரோட்டம் நடக்கும். இவ்விழாவையொட்டி ராமேஸ்வரம் கோயிலில் காலை 10 மணி முதல் இரவு வரை கோயில் நடை சாத்தப்படும் என கோயில் இணை ஆணையர் சிவராம்குமார் தெரிவித்தார்.