பதிவு செய்த நாள்
24
ஜன
2024
06:01
சென்னை : பிறவிப் பயனை அடைந்து விட்டோம், என, அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தின் போது நடந்த சங்கல்ப பூஜையில் பங்கேற்ற தமிழக தம்பதி ஆடலரசன் -- லலிதா பங்கஜவல்லி தெரிவித்துள்ளனர்.
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தின் போது நடந்த சங்கல்ப பூஜையில், நாடு முழுதும் இருந்து, 16 தம்பதியர் பங்கேற்றனர். அவர்களில் தமிழகத்தை சேர்ந்த ஆடலரசன் -- லலிதா பங்கஜவல்லி தம்பதியும் உண்டு.ஆர்.எஸ்.எஸ்., மாநில தலைவரான ஆடலரசன், ராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதியின் மகள் வழி கொள்ளுப்பேரன்.
ஆடலரசனின் மனைவி லலிதா பங்கஜவல்லி, தற்போதைய ராமநாதபுரம் ராணி ராஜேஸ்வரி நாச்சியாரின் தங்கை.அயோத்தி அனுபவம் குறித்து ஆடலரசன் -- லலிதா பங்கஜவல்லி கூறியதாவது:
கடந்த 20 நாட்களுக்கு முன், ஸ்ரீராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளையில் இருந்து, மனைவியுடன் ராமர் கோவில் கும்பாபிஷேக சங்கல்ப பூஜையில் பங்கேற்க வேண்டும் என, அழைப்பு வந்தது. எங்களை போல நாடு முழுதும் இருந்து, 16 தம்பதியர் பங்கேற்றனர்.
எட்டு தம்பதியர் ஒரு பக்கமும், எட்டு தம்பதிகள் மறு பக்கமும் அமர்ந்திருக்க நடுவில் பிரதமர் மோடி, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத், உ.பி., கவர்னர் ஆனந்திபென் பட்டேல், முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் அமர்ந்து முக்கியமான பூஜைகளை செய்தனர்.
சடங்குகள், சங்கல்ப பூஜைகள் முடிந்ததும், கர்ப்பகிரகத்தில் பால ராமருக்கு முதல் பூஜை நடந்தது. அதிலும் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. பிரதமர் மோடி முதல் ஆரத்தி காட்டினார். அப்போது நாங்கள் உட்பட, 16 தம்பதியரும் ஆரத்தி காட்டினோம். ராமநாத சேதுபதி மன்னர் குடும்பத்திற்கும், ராமருக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ராமர் பாலத்தை பாதுகாத்தவர்கள் சேது மன்னர்கள்.
எனவே தான், ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு ராமநாதபுரம் மன்னர் குடும்பத்தைச் சேர்ந்த எங்களை அழைத்து பெருமைப்படுத்தி உள்ளனர்.
ராமர் கோவில் சங்கல்ப பூஜையில் பங்கேற்ற நிகழ்வு, வாழ்வில் யாருக்கும் கிடைக்காத பெரும் பாக்கியம். அப்போது ஏற்பட்ட உணர்வுகளை, மகிழ்ச்சியை, வார்த்தைகளால் எப்படி சொல்வது என்று தெரியவில்லை. பிறவிப் பயனை அடைந்து விட்டோம் என்றுதான் சொல்ல வேண்டும்.
நானும், என் மனைவியும் பெரும் அதிர்ஷ்டசாலிகள். இது எங்களுக்கு மட்டுமல்ல, ராமநாதபுரத்திற்கும், தமிழகத்திற்கும் கிடைத்த பெருமையாகவே பார்க்கிறேன். அயோத்தியிலிருந்து புதன்கிழமை ராமநாதபுரம் வருகிறேன்.
அரண்மனையில் உள்ள ராமர் கோவிலில் வழிபட்ட பிறகே வீட்டுக்கு செல்ல இருக்கிறோம் இவ்வாறு அவர்கள் கூறினார்.
ஆச்சரியம் அளிக்கும் அயோத்தி
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் பங்கேற்றதை, மிகப்பெரிய பாக்கியமாக கருதுகிறேன். அந்த நிகழ்ச்சியில் பங்கேற்க, இந்தியாவின் பல்வேறு துறைகளை சேர்ந்த, முன்னணியில் திகழும் நபர்கள் பங்கேற்றனர். அதில், நானும் பங்கேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது.
ராமர் கோவில் அமைந்துள்ள இடம் முழுதும், பாசிட்டிவ் வைபரேஷன் இருந்தது.நான் விமான நிலையத்தில் இறங்கியது முதல் கோவில் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வரை, அனைத்து ஏற்பாடுகளையும், விழா ஏற்பாட்டாளர்கள் மிகச்சிறப்பான முறையில் செய்திருந்தனர். இதற்கு முன்னரும், நான் அயோத்திக்கு சென்றிருக்கிறேன். அப்போது, சிறிய வீதியில் சென்றேன். தற்போது, அதே அயோத்தி ஆச்சரியம் அளிக்கும் வகையில், பிரமாண்டமாக காட்சி அளிக்கிறது.
- என்.கே.நந்தகோபால், இயக்குனர், தி சென்னை சில்க்ஸ் குரூப் ஆப் கம்பெனிஸ்
உணர்வுப்பூர்வமான தரிசனம்
தஞ்சாவூரை ஆண்ட சரபோஜி ராஜா உள்ளிட்ட மராட்டிய வம்சத்தின் 13வது தலைமுறையை சேர்ந்தவர் பாபாஜி ராஜா போன்ஸ்லே. இவரின் குடும்பத்தினர், தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தை நிர்வகித்து வருகின்றனர். தஞ்சாவூர் பெரிய கோவில் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கோவில்களின் அறங்காவலர்களாக உள்ளனர். அயோத்தி விழாவில் தஞ்சை மராட்டிய அரச குடும்ப பிரதிநிதியாக பங்கேற்றார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: நாங்கள் அங்கு சென்றது முதல் எங்களை வரவேற்பில் திக்குமுக்காட வைத்தனர். எங்களின் காலணிகளை கூட, கரசேவகர்கள் கைப்பட கழற்றினர். நாங்கள் தடுத்தும் அவர்கள் கேட்கவில்லை. குடிநீர், தேநீர், சாப்பாடு உள்ளிட்டவற்றை விருப்பம் அறிந்து உபசரித்தனர்.
ராமரின் பிராண பிரதிஷ்டையின் போது, அங்கு முழுக்க ஒரு உணர்வுப்பூர்வமான நிலை உருவானது. எங்கும் ராம கோஷம் முழங்கியது. அந்த ஊர் மக்கள், ராமர் வந்து விட்டார், இனி ஊருக்கு நல்லது நடக்கும், ஊர் சுபிட்சம் பெறும் என்று நம்புகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் பங்கேற்ற வி.ஐ.டி., துணைத்தலைவர் செல்வம் கூறியதாவது:
ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு, ராம ஜென்ம பூமி அறக்கட்டளை சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி நானும், என் மனைவி அனுஷாவும் சென்றோம். அயோத்தி சென்றடைந்ததும், உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் அலுவலகத்திலிருந்து, எங்களுக்கு மொபைல்
போன் மூலம் அழைப்பு வந்தது.
விழாவிற்கு அழைக்கப்பட்ட அனைவருக்கும், அங்கவஸ்திரம் சாத்தி, சந்தனம், குங்குமம் வைத்து கனிவுடன் வரவேற்றனர். தன்னார்வ தொண்டர்களே இதைச் செய்தனர். எங்களுக்கு தேவையான பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்த வசதிகளையும் செய்து கொடுத்தனர். பின், விழா நடந்த ராமர் கோவில் வளாகத்தில், காலை, 9:00 மணி முதல் மாலை, ௬:௦௦ மணி வரை ஒரே இடத்தில் அமர்ந்திருந்தோம். அனைவருக்கும் தேவையான குடிநீர், உணவு, காபி போன்றவற்றை, உட்கார்ந்திருந்த இடத்திற்கே கொண்டு வந்து கேட்டு கேட்டு வழங்கினர்.
விழா முடிந்து, பிரதமர் அங்கிருந்து புறப்பட்டாலும், முதல்வர் யோகி ஆதித்யநாத், மாலை, 6:00 மணிக்கு மேலும், அங்கேயே இருந்து அனைத்து பக்தர்களுக்கும் தேவையான உதவிகளை செய்யும் பணியில், தன்னார்வலர்களை ஊக்கப்படுத்தி கொண்டே, கண்காணித்து கொண்டு அங்கு சுற்றி சுற்றி வந்தார். விழாவில் பங்கேற்ற அனைவருக்கும், ராமரை எளிமையாக கண்டு வழிபட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பக்தர்கள் கூட்ட நெரிசல்
இல்லாமலும், தள்ளு முள்ளு இல்லாமல், அனைவரும், 5 நிமிடம் நின்று தரிசனம் செய்யும் அளவிற்கு அனுமதிக்கப்பட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.
ராஜா சண்முகம், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க முன்னாள் தலைவர்:
கோடான கோடி மக்கள், பல நுாற்றாண்டுகளாக காத்திருந்த அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்வு நடந்திருக்கிறது. வாழ்வில் செய்த புண்ணியத்தின் அடிப்படையில், எனக்கு நேரடியாக பார்க்க வாய்ப்பு கிடைத்தது. இது, இந்திய மக்களின் ஒட்டுமொத்த சங்கல்பமாக எடுத்து கொள்ள வேண்டும்.
அவர்கள் அனைவரின் வேண்டுதல் இல்லாமல், இதுபோன்ற நிகழ்வு நடந்திருக்காது. அங்கு, பிரமாண்ட அமைப்புகள், பிரம்மாண்ட வேலைப்பாடுகள் மிகவும் நேர்த்தியாக செய்யப்பட்டுள்ளன. ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை பார்க்க, 7,000 பேருக்கு வாய்ப்பு கிடைத்தது. இன்று, கோவிலுக்கு செல்ல கடல் போல மக்கள் கூடியுள்ளனர். அனைத்து ஏற்பாடுகளும் பிரமாண்டாக இருந்தது.
அயோத்தியில் வசதி வாய்ப்பு இல்லை. அப்படி இருந்தும், சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு, அனைவரையும் அரவணைத்து அழைத்து சென்றனர். இந்திய மக்கள் பெருமைப்பட வேண்டிய நிகழ்வு. கிறிஸ்துவர்களுக்கு, வாடிகன் சிட்டி இருக்கிறது; இஸ்லாமியர்களுக்கு மெக்கா இருக்கிறது. ஹிந்துக்களுக்கு பல தரப்பட்ட கோவில்கள் இருந்தாலும், மையப்புள்ளி இல்லாமல் இருந்தது. தற்போது, ராமர் கோவில் மையப்புள்ளியாக உருவாக்கப்பட்டு இருக்கிறது.