பதிவு செய்த நாள்
25
ஜன
2024
12:01
முருகன் கோவில்களில், தைப்பூச திருவிழா கோலாகலமாக நடந்தது. ஆண்டுதோறும் தை மாதம், பூச நட்சத்திரமும் பவுர்ணமி திதியும் கூடிய நாளில், சுவாமி முருகனுக்கு எடுக்கப்படும் விழா தைப்பூசம். தைப்பூச திருவிழாவையொட்டி, இந்த ஆண்டு முருகன் கோவில்களில் அதிகாலை மூலவர், உற்சவருக்கு சிறப்பு சந்தனக்காப்பு அபிஷேக அலங்காரம் நடந்தது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். மொட்டை போட்டும், அலகு குத்தியும் சுவாமி தரிசனம் செய்தனர்.
திரண்ட அழகுள்ளவன் முருகப் பெருமான் அழகர்களிலேயே பேரழகன் மன்மதன் என்பார்கள். அந்த மன்மதனைப் போல ஆயிரம் மடங்கு அழகு கொண்டவன் குமாரன். முருகனின் அழகு முன்பு மன்மதனின் அழகு சாதாரணமாகி விட்டதாம். இதனால் முருகனுக்கு குமாரன் என்ற பெயர் உண்டானது. கு என்பது அதிகப்படியான என்றும், மாரன் என்றால் மன்மதன் என்றும் பொருள். மன்மதன் கருமை நிறம் கொண்டவன். அவனை கருவேள் என்பர். குமாரன் (முருகன்) சிவந்த நிறமுடையவன் என்பதால் செவ்வேள் என்பர். ஆயிரம் கோடி மன்மதர்களின் அழகெல்லாம் ஒன்று சேர்ந்தது போல முருகன் திகழ்வதாக கந்தபுராணம் கூறுகிறது. இத்தகைய சிறப்புடைய அழகன் முருகனை காண முருகன் கோயில்களில் பக்தர்கள் அலைமோதி வருகின்றனர்.
திருச்செந்தூர் முருகன் கோயிலில் பிப்., 3 ம் தேதி தைப்பூச திருவிழாவை முன்னிட்டு அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழிபாடு துவங்கியது. முருகனின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வருகை தந்தனர். பலர் நீண்ட வேலால் அலகு குத்தியும், காவடியுடனும், பலர் அலங்கார தேர்களை இழுத்தும் வழிபட்டனர்.
பழநி : தைப்பூச விழாவையொட்டி பழநிக்கு வருகை புரிந்த பக்தர்களால் நேற்று நகரமே ஸ்தம்பித்தது. 6 முதல் 7 மணி நேரம் வரை காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். இவ்விழாவை முன்னிட்டு சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், தேனி, ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து காவடி எடுத்தும், அலகு குத்தியும், ஆட்டம் பாட்டத்துடன் வருகை தருகின்றனர். ஒட்டன்சத்திரம்-- பழநி ரோட்டில் சாரை சாரையாக அணிவகுத்து வந்தனர். மலைக்கோயிலில் வெளிப்பிரகாரம் வரை நீண்ட வரிசையில் நின்ற பக்தர்கள் 6 முதல் 7 மணி நேரம் வரை காத்திருந்து மூலவரை தரிசனம் செய்தனர். அடிவாரம் பகுதியில் கடும் கூட்டம் உள்ளது.
தஞ்சாவூர், தமிழ் கடவுள் என போற்றப்படும் முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடாக அமையப்பெற்றது கும்பகோணம் அருகேயுள்ள சுவாமிமலை சுவாமிநாத சுவாமி திருக்கோவில். இக்கோவிலில் அதிகாலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். தொடர்ந்து காலை 11 மணிக்கு வெள்ளி மயில் வாகனத்தில் சுவாமி திருவீதியுலா நடைபெற்று, காவிரியாற்றில் தீர்த்தவாரி வைபவமும் நடைபெற்றது. நிறைவாக நாளை வெள்ளிக்கிழமை இரவு யதாஸ்தானம் சேர்தலுடன் இவ்வாண்டிற்கான தைப்பூசத்திருவிழா இனிதே நிறைவு பெறுகிறது.
அழகர்கோவில் சோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். இன்று காலை தைப்பூசத்தையொட்டி சிறப்பு யாகசாலை பூஜைகள், கலச அபிஷேகம், தீர்த்த கலச ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து உற்ஸவர் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியசுவாமிக்கு சஷ்டி மண்டப வளாகத்தில் 16 வகை அபிஷேகங்கள், சரவிளக்கு தீபாராதனைகள் நடந்தன.
முருகனின் அறுபடை வீடுகளில் தைப்பூச திருவிழா கோலாகலமாக நடந்தது. சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம், தீபாராதனை நடந்தது. பல மாவட்டங்களில் இருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் நேர்த்திக் கடன் செலுத்தி, சுவாமியை வழிபட்டனர். கோவில் சார்பில், அன்னதானம் வழங்கப்பட்டது. பக்தர்களின் வசதிக்காக, சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.