பள்ளிவாசல் திறப்பு விழாவிற்கு சீர்வரிசை எடுத்து வந்த இந்து பெண்கள்; வேற்றுமையில் ஒற்றுமை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஜன 2024 01:01
காரைக்குடி; கல்லல் அருகே 350 ஆண்டு பழமையான பள்ளிவாசல், பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு திறப்பு விழா செய்யப்பட்ட நிலையில் இந்து மத பெண்கள் மத நல்லிணக்கத்தை எடுத்துரைக்கும் விதமாக சீர்வரிசை பொருள்களுடன் வந்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
கல்லல் அருகே உள்ள ஆலம்பட்டு குருந்தம்பட்டு கிராமத்தில் ரஹ்மத் ஜும்மா பள்ளிவாசல் உள்ளது. 350 ஆண்டு பழமையான இந்த பள்ளிவாசல் தற்போது பழமை மாறாமல் மீண்டும் அதே பொலிவுடன் புதுப்பிக்கப்பட்டுள்ளது. குடியரசு தினத்தை முன்னிட்டு பள்ளிவாசல் வளாகத்தில் முதலில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து பள்ளிவாசல் திறப்பு விழா நேற்று நடந்தது. பள்ளிவாசலை சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கே.எம் பாஷா திறந்து வைத்தார். இந்த பள்ளிவாசல் திறப்பு விழாவிற்கு ஆலம்பட்டு குறுந்தம்பட்டு கல்லல் உட்பட சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த இந்து மத பெண்கள் தலையில் சீர்வரிசை பொருட்களுடன் வந்து திறப்பு விழாவில் கலந்து கொண்டனர். மத நல்லிணக்கத்தை எடுத்துரைக்கும் விதமாக நிகழ்ந்த இச்சம்பவம் பலரையும் நெகிழ்ச்சி அடைய செய்தது.
முன்னாள் நீதிபதி பாஷா கூறுகையில்: 350 ஆண்டுகால பழமையான பள்ளிவாசல், தொழிலதிபர் முஸ்தபா உதவியால் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதனைத் திறந்து வைக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. மேலும் அனைத்து சமூக மக்களும் சீர்வரிசை எடுத்து வந்து பள்ளிவாசல் விழாவில் கலந்து கொண்டது மறக்க முடியாத திருநாள். இந்தியாவில் பல்வேறு மதங்கள் கலாச்சாரங்கள் இருந்தாலும் வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாடு இந்தியா என்றார்.