பதிவு செய்த நாள்
03
பிப்
2024
10:02
அயோத்தி: உத்தர பிரதேசத்தில் உள்ள அயோத்தி ராமர் கோவிலுக்கு, அம்மாநில தலைநகர் லக்னோவில் இருந்து ஆறு நாட்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், வெறும் கால்களுடன் பாத யாத்திரையாக முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த 350 பேர் சென்று வணங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில், கடந்த மாதம் 22ம் தேதி பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டது. கோவிலில் தரிசனம் செய்ய, நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இந்நிலையில், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் ஒரு பிரிவான முஸ்லிம் ராஷ்ட்ரீய மஞ்ச் என்ற முஸ்லிம் அமைப்பைச் சேர்ந்த 350 பேர் கொண்ட குழுவினர், ராமர் கோவிலில் தரிசனம் மேற்கொள்ள கடந்த மாதம் 25ம் தேதி உ.பி., மாநில தலைநகர் லக்னோவில் இருந்து பாத யாத்திரையாக புறப்பட்டனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் வெறும் காலுடன் பாத யாத்திரை மேற்கொண்ட இக்குழுவினர், ஜெய் ஸ்ரீ ராம் என முழக்கமிட்டபடி, நேற்று முன்தினம் 150 கி.மீ., கடந்து அயோத்தி ராமர் கோவிலை அடைந்தனர். அதன்பின், பகவான் ராமரை வணங்கி, தங்கள் பிரார்த்தனையை நிறைவேற்றினர். இது குறித்து, முஸ்லிம் ராஷ்ட்ரீய மஞ்ச் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ராஜா ராய்ஸ் கூறுகையில், பகவான் ராமர் நம் அனைவருக்கும் மூதாதையர். ஜாதி, மதம் ஆகியவற்றை விட நம் நாடும், மனித நேயமும் முதன்மை பெறுகிறது. எந்த மதமும் மற்றவர்களை விமர்சிக்கவோ, ஏளனமாகவோ, இழிவாகவோ பேச கற்பிக்கவில்லை, என்றார்.