தேவிபட்டினம் நவபாஷாணத்தில் தை அமாவாசை; பக்தர்கள் நீராட ஏற்பாடுகள் தீவிரம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08பிப் 2024 04:02
தேவிபட்டினம்; தை அமாவாசை தினத்தை முன்னிட்டு நவபாஷாணத்தில் புனித நீராடுவதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை இந்து அறநிலையத் துறை அதிகாரிகள் செய்துள்ளனர். தேவிபட்டினம் நவபாஷாணத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யவும், பல்வேறு தோஷ நிவர்த்தி வேண்டி பரிகார பூஜைகள் செய்யவும், தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்கு தை அமாவாசை மற்றும் ஆடி அமாவாசை தினங்களில் ஆண்டுதோறும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில், நாளை தை அமாவாசை தினம் கடைபிடிக்கப்படுவதால், பக்தர்கள் பாதுகாப்பாக நவபாஷாண கடலில் புனித நீராடும் வகையில், நவபாஷாண கடற்கரை பகுதியில் பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்தும் விதமாக கம்பால் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை சிவகங்கை இணை ஆணையர் பழனி குமார், உதவி ஆணையர் ஞானசேகரன், செயல் அலுவலர் நாராயணி ஆகியோர் செய்து வருகின்றனர்.