பதிவு செய்த நாள்
14
பிப்
2024
10:02
துாத்துக்குடி : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று காலை மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
முருகப்பெருமானின் இரண்டாவது படை வீடான திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித் திருவிழா இன்று துவங்கியது. கொடியேற்றத்தையொட்டி இன்று அதிகாலை 1:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு 1:30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2:00 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. அதிகாலை 4:30 மணிக்கு மேல் 5:00 மணிக்குள் கோயில் கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.
பின் கொடி மரத்திற்கு மகா தீபாராதனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். ஐந்தாம் திருவிழாவாக, பிப்.,18 இரவு 7:30 மணிக்கு ஆனந்தவல்லி அம்பாள், சிவக்கொழுந்தீஸ்வரர் கோயிலில் வைத்து சுவாமிக்கும் அம்மனுக்கும் குடவருவாயில் தீபாராதனை நடக்கிறது. பிப்.,20 மாலை 4:30 மணிக்கு சுவாமி சண்முகர் தங்கசப்பரத்தில் சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வருகிறார். 21ம் தேதி அதிகாலை சுவாமி சண்முகர் வெள்ளை சப்பரத்தில் வெள்ளை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வருகிறார். அன்று காலை 11:00 மணிக்கு சுவாமி சண்முகர் பச்சை நிற கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வருகிறார். விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் பிப்., 23 காலை 6:30 மணிக்கு நடக்கிறது. 24ம் தேதி தெப்பத் திருவிழா நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், ராமதாஸ், கணேசன், செந்தில் முருகன் கோயில் இணை ஆணையர் கார்த்திக், கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.