காளகஸ்தீஸ்வரர் கோவிலில் பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19பிப் 2024 10:02
தேனி மாவட்டம் பெரியகுளம் கெங்குவார்பட்டியில் பழமையான காளகஸ்தீஸ்வரர் ஞானாம்பிகை கோவிலில், 13ம் நுாற்றாண்டைச் சேர்ந்த பழமையான கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இப்பகுதியில், தொல்லியல் ஆய்வாளர்களான, கடமலைக்குண்டு அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் செல்வம், கெங்குவார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் அப்பாஸ் ஆய்வு செய்ததில், 13ம் நுாற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுகளை கண்டறிந்தனர். இது குறித்து, தொல்லியல் ஆய்வாளர் செல்வம் கூறியதாவது: கோவில் திருப்பணி செய்பவர்கள் கோவிலை சுற்றியுள்ள புதர்களை அகற்றும் போது, மண்ணுக்குள் புதைந்திருந்த இரண்டு கல்வெட்டுகளை எடுத்து வைத்திருந்தனர். அவற்றில் ஒன்று சிதைந்துள்ளதால் முழுமையாக வாசிக்க முடியவில்லை. இரண்டாவதாக உள்ள துண்டு கல்வெட்டு, நில தான அளவைகளை குறிப்பதாக உள்ளது. வைகை ஆற்றின் முக்கிய கிளை நதியான மஞ்சளாற்றின் வடகரையில் இக்கோவில் அமைந்திருப்பதால், பிற்கால பாண்டியர் ஆட்சிக் காலத்தில் இப்பகுதி செழிப்பாக இருந்ததை அறிய முடிகிறது. இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் -