கருட வாகனத்தில் திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் அருள்பாலிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19பிப் 2024 03:02
திருக்கோஷ்டியூர்; திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள் கோயிலில் மாசித் தெப்ப உத்ஸவத்தை கருட வாகனத்தில் பெருமாள் உலா வந்த அருள்பாலித்தார்.
சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் தெப்ப உத்ஸவம் 11 நாட்கள் நடைபெறும். இந்தாண்டு மாசித் தெப்ப உத்ஸவம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் தினசரி காலை, இரவில் பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதி புறப்பாடும் நடைபெற்று வருகிறது. விழாவில் இன்று கருட வாகனத்தில் பெருமாள் உலா வந்த அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பிப். 20 இரவில் ஆண்டாள் சன்னதியில் மாலை மாற்றுதலும், பிப்.21 மாலையில் பெருமாளுக்கு சூர்ணாபிஷேகமும், இரவில் தங்கப்பல்லக்கில் புறப்பாடும் நடைபெறும். பிப்.23 காலையில் 8:00 மணி அளவில் வெண்ணெய்த்தாழி அலங்காரத்தில் கோயிலிலிருந்து சுவாமி புறப்பாடாகி தெப்பக்குளம் எழுந்தருளலும், காலை 10:02 மணி அளவில் தெப்பம் முட்டுத்தள்ளுதலும் நடைபெறும். பின்னர் தெப்பக்குள மண்டபம் எழுந்தருளி சிறப்பு தீபாராதனை நடைபெறும். இரவில் தங்கப்பல்லக்கில் சுவாமி புறப்பாடு நடைபெறும். பிப்.24 ல் காலை 10:48 மணிக்கு பகல் தெப்பமும், இரவு 7:30 மணிக்கு மேல் இரவு தெப்பமும் நடைபெறும். பிப்.25 காலையில் சக்கரத்தாழ்வாருக்கு தெப்பக்குளத்தில் தீர்த்தவாரியும், இரவில் சுவாமி தங்கப் பல்லக்கில் ஆஸ்தானத்திற்கு எழந்தருளலும் நடைபெறும்.