பதிவு செய்த நாள்
21
பிப்
2024
10:02
சிதம்பரம்; சிதம்பரம் நடராஜர் கோயிலில் உலக நன்மை கருதி நடைபெறவுள்ள அதிருத்ர யாகத்தை முன்னிட்டு சிவகாமசுந்தரி ஸமேத நடராஜ மூர்த்திக்கு கோடி அர்ச்சனை முடிவுற்று கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் நடந்தது.
நடராஜர் கோயிலில் உலக நன்மை கருதி பொதுதீட்சிதர்களால் கோடி அர்ச்சனை கடந்த மாதம் டிச.29-ம் தேதி முதல் 50 நாட்களுக்கு கோடி அர்ச்சனை நடைபெற்றது. தொடர்ந்து பிப்.8ம் தேதி காலை அதிருத்ர ஜபம் தொடங்கியது. அதிருத்ர ஜபம் பிப்.18-ம் தேதி வரை தினமும் காலை 8 மணியளவில், 121 தீக்ஷிதர்களால் பத்து தினங்களில் 14,641 முறை ஸ்ரீ ருத்ர ஜப பாராயணம் (அதிருத்ர ஜபம்) செய்யப்பட்டது. அதிருத்ர மஹா யாகம் என்பது ஸ்ரீ ருத்ரத்தினை 14641 முறை சொல்லப்பட்டு, அதில் பத்தில் ஒரு பங்கு ஹோமம் செய்யப்படுவது ஆகும். அதிருத்ர மகாயாகத்தை முன்னிட்டு பிப்.19-ம் தேதி முக்குறுணி விநாயகர் ஆலயத்தில் கணபதி ஹோமம் நடந்தது. பிப்.20-ம் தேதி கோயில் வளாகத்தில் நவக்கிரக ஹோமம் தொடங்கியது. பிப்.21-ம் தேதி கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட யாகசாலையில் ஆச்சார்யவர்ணம், மதுபர்க்க தானம், தனபூஜை நடைபெறுகிறது. உலக நன்மை கருதி பிப்.22-ம் தேதி சிவகாமசுந்தரி சமேத நடராஜ பெருமானுக்கு ஏககால லட்சார்ச்சனையும், யாகசாலையில் 2016 கலசம் ஆவாஹனம் செய்யப்படுகிறது. பின்னர் அதிருத்ர மஹாயாகம், லட்ச ஹோமம், அதிருத்ர ஹோமம், வஸோர்த்தாரா ஹோமம், மகாபூர்ணாஹூதி நடைபெறுகிறது. லட்ச ஹோமம் என்பது ஒரே நேரத்தில் நூற்று எட்டு தீட்சிதர்கள், ஒன்பது யாக குண்டங்கள் வாயிலாக நடேச ஸஹஸ்ரநாமாவளிகளை ஹோமம் செய்வது லட்ச ஹோமம் ஆகும். பின்னர் வடுக பூஜை, கன்யா பூஜை, சுவாசினி பூஜை, தம்பதி பூஜை, கோ பூஜை, கஜபூஜை முடிவுற்று யாகசாலையிலிருந்து கடம் புறப்பாடு நடைபெற்று கோயில் கனகசபையில் எழுந்தருளும் சிவகாமசுந்தரி சமேத நடராஜப் பெருமானுக்கு 2016 கலக அபிஷேகத்துடன் மாசி மாத மஹாபிஷேகமும் விமரிசையாக நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை நடராஜர் கோயில் பொதுதீட்சிதர்களின் செயலாளர் சிவராமதீட்சிதர், துணை செயலாளர் சிவசங்கர தீட்சிதர் செய்துள்ளனர்.