குருவாயூர் கோவில் உற்சவம் யானைகள் ஓட்டத்துடன் துவங்கியது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21பிப் 2024 05:02
பாலக்காடு; குருவாயூர் கிருஷ்ணர் கோவில் உற்சவம் யானைகள் ஓட்டத்துடன் துவங்கின.
கேரளாவின் பிரசித்தி பெற்ற கோவில் குருவாயூர் கிருஷ்ணர் கோவில். கோவிலில் மாசி மாதம் உற்சவம் நடப்பது வழக்கம். நடப்பாண்டு கோவில் உற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக தேவஸ்தானத்திற்கு சொந்தமான 40 யானைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பத்து யானைகள் பங்கேற்ற யானையோட்டம் நிகழ்ச்சி நடந்தன. மஞ்சுளால் பகுதியில் இருந்து ஆரம்பித்த யானையோட்டத்தில் தேவதாஸ், ரவி கிருஷ்ணன், கோபி கண்ணன் ஆகிய யானைகள் முன் வரிசையில் நின்று போட்டி போட்டு ஓடியது. தெற்கு கோபுர வாசல் வழியாக கோவிலுக்குள் நுழைந்த கோபி கண்ணன் யானை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் கோபி கண்ணன் என்ற யானை வெற்றி பெறுவது 9-வது முறை என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, கோபி கண்ணன் யானை சுற்றம்பலத்தை ஏழு முறை வலம் வந்து மூலவரை வணங்கி நின்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற யானைகளுக்கு யானையூட்டு (உணவு வழங்குதல்) நிகழ்ச்சி நடந்தன. இந்த நிகழ்ச்சிகளுக்கு போலீஸ் பலத்த பாதுகாப்பு ஏற்படுத்தியிருந்தது. இனி வரும் 10 நாட்கள் விழாவில் உற்சவர் கோபிக் கண்ணன் யானை மீது அமர்ந்து பவனி வருவார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக காலை உற்சவர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் வைபவம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு உற்சவ மூர்த்தியை கண்டு வணங்கி பக்தி பரவசம் அடைந்தனர்.