திருக்கோளூர் கோயிலில் சுவாமி குபேரனுக்கு நிதி கொடுத்த தினம்; குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22பிப் 2024 04:02
ஆழ்வார்திருநகரி; நவதிருப்பதி ஸ்தலங்களில் ஒன்றான திருக்கோளுர் வைத்தமாநிதி பெருமாள் கோயிலில் சுவாமி பெருமாள் குபேரனுக்கு நிதி கொடுத்த தினத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்டவரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். துாத்துக்குடி மாவட்டம் தாமிரபரணி நதிக்கரையில் 108 வைணவ திவ்யதேசங்களில் ஒன்றானதும், நவதிருப்பதி ஸ்தலங்களில் 8 வது திருத்தலமாக விளங்குவது திருக்கோளுர் வைத்தமாநிதி பெருமாள் கோயில் இங்கு குபேரன் ஜோதியாய் வணங்கும் தலம். இத்தகைய சிறப்பு வாய்ந்த கோயிலில் வருடம் முழுதும் திருவிழாக்கள் நடைபெற்றாலும் மாசி மாதம் புனர்பூச நட்சத்திரத்தில் பெருமாள் குபேரனுக்கு நிதி கொடுத்த தினத்தை இங்கு சிறப்பாக கொண்டாடுகின்றனர். நிதியை இழந்த குபேரனுக்கு அவன் இழந்த செல்வத்தை பாதுகாத்து அளந்ததால் மரக்காலைத் தலைக்கு வைத்து பள்ளி கொண்டகோலத்தில் மூலவர் அருள்பாலிக்கின்றார். பக்தர்கள் தங்களின் பணத்தை பெருமாளின் தலைப்பகுதியில் மரக்காலில் வைத்து வணங்கி பெற்று செல்கின்றனர். அதனைஅவர்கள் வீடுகளில் வைத்தால் செல்வம் பெருகும் என்பது ஐதீகம். இந்நிலையில் நேற்று குபேரனுக்கு சுவாமி நிதிகொடுத்த தினத்தை முன்னிட்டு நேற்று மூலவருக்கு சிறப்பு பூச்சட்டைஅலங்காரம் செய்யப்பட்டிருந்தது. உற்சவர் ஸ்ரீதேவி பூதேவி சமேதவைத்தமாநிதி பெருமாள் மற்றும் தாயார் குமுதவல்லி, கோளுர் வள்ளி தேவியருடன் உடன்சுவாமி மதுரகவி ஆழ்வார் குலசேகரஆழ்வார் பூப்பந்தல்கீழ் சிறப்பு அலங்காரத்தில் மகா மண்டபத்தில் சேவை சாதித்தருளினார். ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.