குற்றாலம் ஐந்தருவி அருகே பழமையான குகை; மருந்து ஆய்வுக்கூடம் கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26பிப் 2024 06:02
ராமநாதபுரம் : தென்காசி மாவட்டம் குற்றாலம் ஐந்தருவி அருகே 2000ஆண்டுகள் பழமையான குகை மருந்து ஆய்வுக்கூடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மதுரை தொல்லியல் ஆய்வாளர் வெ.பாலமுரளி கூறியதாவது: குற்றாலம் ஐந்தருவி அருகே 20 அடி துாரத்தில் குகைத்தளம் ஒன்று உள்ளது. இங்கு வரலாற்று ஆய்வு மேற்கொண்டோம். ஏற்கனவே கண்டறியப்பட்ட தமிழ்க் கல்வெட்டுகள்,பாறை ஓவியங்கள் உள்ள இடங்களுடன் இந்த குகை அமைப்பு ஒத்துப்போகிறது. இவ்விடத்தல் கண்டிப்பாக சிலகற்படுக்கைகளும் இருந்திருக்க வேண்டும். அதைமறைக்கும் விதமாக தளத்தை சிமென்ட்டால் பூசியுள்ளனர். மருந்து அரைக்கும்குழிகளையும், நீர் வடிகால் தடங்களையும் மூடாமல் விட்டுள்ளனர்.
இந்த அமைப்புகள் ஆசீவகர்கள் (பின்னர் சித்தர்களாக மாற்றப்பட்டவர்கள்) அல்லது தமிழறிஞர்கள் இந்த இடத்திலிருந்து மருத்துவ சேவை அல்லது மருத்துவ ஆராய்ச்சி செய்துள்ளது தெரிய வந்துள்ளது. நமது இலக்கியங்களிலும் அகத்தியர் போன்ற சித்தர்கள் பொதிகை மலையில் (இன்றைய குற்றாலம்)தவம் இருந்ததை குறிப்பிட்டுள்ளனர். எங்கெல்லாம் இது போன்ற கற்படுக்கைகளும்,மருந்தரைக்கும் குழிகளும், தமிழ் கல்வெட்டுக்களும் இருக்கின்றனவோ, அங்கு ஒரு அய்யனார் கோயிலும்உள்ளன. இதன்படி 50 அடி தொலைவில் சாஸ்தா கோயில் என்ற பெயரில் அய்யனார் கோயிலும் இருக்கிறது.
சிறு துாரத்திலேயே ஏழு கன்னியர் வழிபாட்டு தலம் உள்ளது.மேலே சொன்ன எல்லா கூறுகளையும் இணைத்துப்பார்த்தால் ஏதோ ஒரு தொடர்பு இருப்பது உறுதியாகிறது.எனவே இவ்விடத்தில் 2000 அல்லது 3000 ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு அறிவுசார் பள்ளி, ஆய்வுக் கூடம் அல்லது மருத்துவக் கூடம்இருந்திருப்பது மறுக்க இயலாத ஒரு உண்மை. இத்தகையவரலாற்று, கலாச்சார சிறப்பு மிக்ககுகைத்தளம் ஆடைகளை காயப்போட்டு மாற்றிக்கொள்ளும் இடமாகவும் இருப்பது வேதனையான விஷயம். இவ்விடத்தைபாதுகாக்க தொல்லியல் துறை நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.