பதிவு செய்த நாள்
02
மார்
2024
01:03
சென்னை: கள்ளழகர் கோவில் கோட்டைச் சுவர்களை புனரமைக்கும் பணிகள் அனைத்தையும், வீடியோ பதிவு செய்யும்படி உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், கோட்டைச்சுவரில் பதிக்கப்பட்ட கற்கள் ஒவ்வொன்றின் மீதும், எந்த ஒரு பணியையும் துவக்கும் முன் எண்ணிட்டு, அவற்றை மீண்டும் பயன்படுத்த பாதுகாக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. கோவில்கள் பாதுகாப்பு, புனரமைப்பு தொடர்பான வழக்குகளை, நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு அடங்கிய சிறப்பு அமர்வு விசாரித்து வருகிறது. இந்த சிறப்பு அமர்வில் பட்டியலிடப்பட்ட வழக்குகள் நேற்று விசாரணைக்கு வந்தன. அப்போது, இண்டிக் கலெக்டிவ் அறக்கட்டளை நிர்வாகி டி.ஆர்.ரமேஷ் ஆஜராகி கூறியதாவது:
மதுரை மாவட்டம் அழகர் கோவில் கள்ளழகர் கோவிலின் பழுதடைந்த கோட்டைச் சுவர்களை, பழமை மாறாமல் சீரமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இப்பணிகளை செய்து வரும் அறநிலையத்துறையினர், புல்டோசர் இயந்திரங்கள் கொண்டு, 1 கி.மீ., நீளத்துக்கு அதிகமாக உள்ள சுற்றுச்சுவரை அகற்றுகின்றனர். பழமையான கட்டுமானத்தை புதுப்பிக்க ஒப்புதல் வழங்கும் முன், மாநில அளவிலான நிபுணர் குழு ஆய்வு செய்யவில்லை. ஆனால், புனரமைக்கும் பணிக்கு மட்டும் ஒப்புதல் அளித்துள்ளது. இவ்வாறு கூறிய அவர், அதற்கான புகைப்பட ஆதாரங்களை தாக்கல் செய்தார்.
அறநிலையத் துறை சார்பில், சிறப்பு பிளீடர் அருண் நடராஜன் ஆஜராகி வாதாடியதாவது: மாநில அளவிலான நிபுணர் குழு ஒப்புதல் பெற்றும், அவர்கள் வழங்கிய வழிகாட்டுதல்படியும் தான் பழமையான சுற்றுச்சுவரை அகற்றிவிட்டு, திரும்ப கட்டும் பணி நடக்கிறது. ஏற்கனவே உள்ள கற்களை அகற்றும் முன், அதற்கு எண்ணிடப்படுகிறது. திரும்ப அதே கற்களை கொண்டே, பழமை மாறாமல் சுவர் கட்டப்படும். கற்களுக்கு எண்ணிட்டு திரும்பவும் அதே மாதிரி கட்டுவது உள்பட, அனைத்து பணிகளும் வீடியோ பதிவு செய்யப்படும். இவ்வாறு அவர் வாதாடினார். இதையடுத்து, கட்டுமானம் சார்ந்த பணிகளையும், கோட்டை சுவரில் பதிக்கப்பட்டுள்ள கற்கள் ஒவ்வொன்றின் மீதும் எண்ணிட்டு, அவற்றை மீண்டும் பயன்படுத்த பாதுகாக்க வேண்டும்; அதை வீடியோ பதிவும் செய்ய வேண்டும் என, அறநிலையத் துறைக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், இவ்விவகாரம் தொடர்பாக மனுவாக தாக்கல் செய்யும்படி மனுதாரருக்கு அறிவுறுத்தி, வழக்கு விசாரணையை தள்ளி வைத்தனர்.