பதிவு செய்த நாள்
02
மார்
2024
01:03
ராமேஸ்வரம்; ராமேஸ்வரத்தில் அக்னி தீர்த்த கரையில் திதி பூஜை செய்யும் பக்தரிடம் கட்டணம் வசூலிக்க கோயில் நிர்வாகம் முடிவு செய்து உள்ளது. இதற்கு ஹிந்து முன்னணியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
தீர்த்த தலமான ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்கள் முதலில் அக்னி தீர்த்த கடலில் நீராடி விட்டு, கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களை நீராடுவார்கள். இதில் முன்னோர்கள் ஆன்மா சாந்தியடைய வேண்டி பக்தர்கள் அக்னி தீர்த்த கரையில் புரோகிதர்கள் மூலம் திதி, தர்ப்பணம் பூஜை செய்து தட்சனையாக ரூ. 300 முதல் 500 வரை கொடுப்பார்கள். பாரம்பரியமான இந்த நடைமுறைக்கு வேட்டு வைக்கும் விதமாக கோயில் நிர்வாகம் நேரடியாக பக்தரிடம் பணம் வசூலிக்க திட்டமிட்டு உள்ளது. திலதர்பணம், பிண்ட பூஜைக்கு கட்டணம் ரூ. 200, 400 வசூலித்து, புரோகிதர்களுக்கு கூலி ரூ.80, 160 வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. காலம் காலமாக பூஜை செய்யும் புரோகிதர்களை வெளியேற்ற கோயில் நிர்வாகம் அடாவடியாக செயல்படுகிறது என ஹிந்து அமைப்பினர் தெரிவித்தனர். இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட ஹிந்து முன்னணி தலைவர்
ராமமூர்த்தி கூறுகையில் : தர்ப்பணம், பிண்ட பூஜை செய்வது புரோகிதர்களின் தொழில், அவர்களது உரிமை ஆகும். பல நூறு ஆண்டுகளாக நடக்கும், இந்த முறையை நசுக்கும் விதமாக கோயில் நிர்வாகம், அதுவும் கோயிலுக்கு வெளியில் அக்னி தீர்த்தக் கரையில் பக்தரிடம் பணம் வசூலிக்க கந்துவட்டிகாரர் போல் கோயில் நிர்வாகம் செயல்பட உள்ளது. இக்கோயிலில் உண்டியல், தீர்த்தம், தரிசனம் கட்டணம் மூலம் ஓராண்டில் ரூ. 25 முதல் 30 கோடி வரை வருவாய் கிடைக்கிறது. இது போதாது என்று அக்னி தீர்த்த கரையிலும் பக்தரிடம் வசூலிக்க முடிவு செய்திருப்பது ஹிந்து அறநிலைத்துறையின் அராஜக போக்கை காட்டுகிறது. எனவே இத்திட்டத்தை கைவிட வேண்டும் என்றார்.